விபத்து
விபத்து

ராயக்கோட்டை அருகே மனைவி பிறந்தநாளில் கணவர் விபத்தில் பலி

ராயக்கோட்டை அருகே மனைவியின் பிறந்த நாளில் அரசு அதிகாரி , விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Published on

ராயக்கோட்டை:

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே நாகனூர் கிராமத்தை சேர்ந்தவர் நரசிம்மமூர்த்தி (வயது 34). இவர் கெலமங்கலம் தோட்டக்கலை துறையில் வேளாண்மை உதவி அலுவலராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி சாந்தி (27). இவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்தது. கணவன்- மனைவி இருவரும் ஓசூர் அருகே அலசநத்தம் கிராமத்தில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் சாந்தி நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வந்தார். இதனால் சாந்தி தலை பிரசவத்துக்காக தருமபுரி மாவட்டம் இண்டூர் அருகே பள்ளப்பட்டியில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றிருந்தார். நேற்று சாந்திக்கு பிரசவ தேதி கொடுத்திருந்தால் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

இதற்கிடையே நேற்று சாந்திக்கு பிறந்த நாள் ஆகும். இதனால் மனைவியை பார்ப்பதற்காக வேலை முடிந்து நேற்று நரசிம்மமூர்த்தி, ஓசூரில் இருந்து தருமபுரி நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். இரவு 9 மணியளவில் உத்தனப்பள்ளி அருகே சானமாவு என்ற இடத்தில் வந்த போது பின்னால் வந்க சரக்கு வேன் , மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த நரசிம்மமூர்த்திக்கு, தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் உத்தனப்பள்ளி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் விபத்தில் பலியான நரசிம்மமூர்த்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே சாந்திக்கு இன்று காலை ஆண் குழந்தை பிறந்தது. இதனால் சாந்தியின் உறவினர்கள் ஒரு பக்கமும் மகிழ்ச்சியும், மற்றொரு பக்கம் குழந்தையின் தந்தை நரசிம்மமூர்த்தி விபத்தில் பலியான சோகத்திலும் தவித்து அழுதது காட்சி, காண்போரின் கண்களை குளமாக்கியது.

X

Maalai Malar
www.maalaimalar.com