தீ
தீ

மகளை தீ வைத்து எரித்து கொன்ற தாய்- திருவொற்றியூரில் பரபரப்பு சம்பவம்

கணவரின் சந்தேகத்தை தீர்ப்பதற்காக எதுவும் அறியாத மகளை தாயே தீவைத்து எரித்துக்கொன்ற சம்பவம் திருவொற்றியூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Published on

சென்னை:

திருவொற்றியூரை சேர்ந்தவர் ஜெயலட்சுமி (வயது40). இவர் ஏற்கனவே 2 பேரை திருமணம் செய்து பிரிந்துள்ளார்.

தற்போது அவர் 3-வதாக திருவொற்றியூர் மேட்டுத்தெருவை சேர்ந்த பத்மநாபன் என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

ஜெயலட்சுமிக்கு 2-வது கணவர் மூலம் பிறந்த 13 வயதான மகள் பவித்ராவும் அவர்களுடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் ஜெயலட்சுமியின் நடத்தையில் 3-வது கணவர் பத்மநாபனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

ஜெயலட்சுமி பலமுறை கண்டித்தும் அதனை கணவர் பத்மநாபன் ஏற்கவில்லை. தொடர்ந்து அவர் மனைவியை குற்றம்சாட்டி வந்தார்.

நேற்று இரவு அவர்களுக்கு இடையே மீண்டும் இதுதொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பத்மநாபன், ஜெயலட்சுமியிடம் 2-வது கணவருக்கு பிறந்த மகள் பவித்ரா மீது சத்தியம் செய்யும்படி கூறினார்.

ஆத்திரத்தில் இருந்த ஜெயலட்சுமி வீட்டில் இருந்த மண்எண்ணெயை திடீரென மகள் பவித்ரா மீது ஊற்றி தீவைத்து ‘யாருடனும் தொடர்பு இல்லை’ என்று சத்தியம் செய்தார்.

இதற்குள் தீ மளமளவென பற்றி எரிந்ததால் உடல் கருகிய பவித்ரா அலறி துடித்தார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தபோது சிறுமி பவித்ரா உடலில் தீப்பற்றி எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக தீயை அனைத்து பவித்ராவை மீட்டனர். உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடிய அவரை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் பவித்ராவை அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இன்று மதியம் பவித்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பத்மநாபன், ஜெயலட்சுமியை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

ஏற்கனவே உயிருக்கு போராடிய நிலையில் இருந்த சிறுமியிடம் மாஜிஸ்திரேட் கிருஷ்ணன் வாக்குமூலம் பெற்றுள்ளார்.

நடத்தை சந்தேகத்தை தீர்ப்பதற்காக எதுவும் அறியாத மகளை தாயே தீவைத்து எரித்துக்கொன்ற சம்பவம் திருவொற்றியூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com