எடப்பாடி அருகே மளிகை கடைக்காரர் வீட்டில் புகுந்து துணிகர கொள்ளை

கொள்ளையன் விட்டுச் சென்ற இருசக்கர வாகனம் மற்றும் ஆயுதங்களை வைத்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர் குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.அதிகாலை நேரத்தில் ஆயுதங்களுடன் வீட்டில் கொள்ளையன் நுழைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பான சூழலை ஏற்படுத்தியுள்ளது.
எடப்பாடி அருகே மளிகை கடைக்காரர் வீட்டில் புகுந்து துணிகர கொள்ளை
Published on

எடப்பாடி:

சேலம் மாவட்டம் எடப்பாடி சங்ககிரி பிரதான சாலையில் உள்ள கோழிப்பண்ணை பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார் (வயது 48). இவரது மனைவி மேனகா (40).

இவர்கள் தாங்கள் குடியிருக்கும் வீட்டின் அருகே மளிகை கடை வைத்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணி அளவில், வீட்டில் நன்கு தூங்கிக் கொண்டிருந்த சிவகுமார், ஏதோ சத்தம் கேட்டு திடீரென விழித்துப் பார்த்தார்.

அப்போது, சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், சிவகுமாரின் வீட்டிற்குள் நுழைந்து, அங்கிருந்த பீரோவில் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் கூச்சலிட்டார்.

வீட்டின் உரிமையாளர் விழித்து கொண்டதை சற்றும் எதிர்பார்க்காத கொள்ளையன், தான் கொண்டு வந்திருந்த கத்தி, கடப்பாறை மற்றும் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டுவிட்டு, மின்னல் வேகத்தில் கொள்ளையடித்த பணத்துடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான்.

இதுகுறித்து சிவக்குமார் கொங்கணாபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த கொங்கணாபுரம் போலீசார், கொள்ளை நடந்த வீட்டில் தடயங்களை சேகரித்தனர்.

மேலும், வீட்டில் எவ்வளவு பணம் கொள்ளை போயுள்ளது என்பது குறித்தும், கொள்ளையன் விட்டுச் சென்ற இருசக்கர வாகனம் மற்றும் ஆயுதங்களை வைத்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர் குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகாலை நேரத்தில் ஆயுதங்களுடன் வீட்டில் கொள்ளையன் நுழைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com