பயணியை தாக்கி செல்போன் பறித்த புகார்: அரசு பஸ் டிரைவர்- கண்டக்டர் கைது

நாங்குநேரி அருகே பயணியை தாக்கி செல்போன் பறித்த புகாரில் அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

நாங்குநேரி:

நெல்லை மாவட்டம் நாங்குநேரி யாதவர் தெருவை சேர்ந்தவர் கணேஷ்குமார் (வயது42), டிரைவர்.

கடந்த 28-ந்தேதி இவர் வள்ளியூரில் இருந்து நாங்குநேரி வருவதற்காக குமுளி அரசு பஸ்சில் ஏறினார். அப்போது பஸ் கண்டக்டரான குமரி மாவட்டம் வள்ளிவிளையை சேர்ந்த விவேகானந்தன் (48) என்பவர் இந்த பஸ் நாங்குநேரியில் நிற்காது எனவே கீழே இறங்குமாறு கூறியதாக தெரிகிறது.

இதனால் அவருக்கும், கணேஷ்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் நெல்லைக்குரிய கட்டணமாக ரூ.35 பயண சீட்டு வழங்கி கணேஷ் குமாரை அனுமதித்தனர்.

இது தொடர்பாக அவர்களுக்குள் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அதனை கணேஷ் குமார் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த கண்டக்டர் விவேகானந்தன் மற்றும் டிரைவரான குமரி மாவட்டம் ஆதங்கோடு பகுதியை சேர்ந்த ஜான் பெனடிக்ட் (49) ஆகிய இருவரும் சேர்ந்து கணேஷ் குமாரை தாக்கி அவரது செல்போனை பறித்ததாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவர் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

இதுகுறித்து கணேஷ் குமார் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

இந்த வழக்கில் கண்டக்டர் விவேகானந்தன், டிரைவர் ஜான் பெனடிக்ட் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com