ரூ.50 லட்சம் கேட்டு நாமக்கல்லில் கடத்தப்பட்ட சிறுமி மீட்பு- தம்பதி கைது

நாமக்கல்லில் ரூ.50 லட்சம் கேட்டு சிறுமி கடத்தப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கைதானவர்களை படத்தில் காணலாம்.
கைதானவர்களை படத்தில் காணலாம்.
Published on

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே புதுக்கோட்டை ஊராட்சி காளிசெட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 39). லாரி டிரைவர். இவருடைய மனைவி கவுசல்யா (29). இவர்களுக்கு 14 வயதில் ஒரு மகனும், 11 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்த சிறுமி புதுப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறாள்.

சரவணன் குடும்பத்துடன் கடந்த 6 ஆண்டுகளாக அங்குள்ள ஊராட்சி மன்றம் பின்புறம் முருகேசன் என்பவரின் மாடி வீட்டில் வாடகைக்கு வசித்து வருகிறார். சரவணன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வேலை விஷயமாக வெளியூர் சென்று விட்டார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கவுசல்யா மற்றும் அவரது 2 பிள்ளைகளும் மொட்டை மாடியில் தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவு சுமார் 2 மணி அளவில் முகமூடி அணிந்து வந்த 2 மர்மநபர்கள் ஜன்னல் சிலாப் வழியாக ஏறி மொட்டை மாடிக்கு சென்றனர்.

பின்னர் கவுசல்யா மற்றும் அவரது மகன் வாயில் பிளாஸ்டிக் டேப்பால் ஒட்டி, 2 பேரின் கைகளையும் பின்னால் கட்டி போட்டு விட்டு சத்தம் போட்டால் கொன்று விடுவதாக மிரட்டி, கவுசல்யா அணிந்திருந்து நகை, வெள்ளி கொலுசு ஆகியவற்றை மர்மநபர்கள் பறித்தனர்.

இதையடுத்து தாய், சகோதரன் கண் முன்னே சிறுமியை அவர்கள் கடத்தி சென்றனர். சிறுமியை கடத்திய கும்பல், கவுசல்யா வைத்திருந்த செல்போனில் இருந்த சிம் கார்டையும் எடுத்து சென்றனர். வீட்டின் உரிமையாளர் முருகேசனுக்கு அந்த எண் மூலம் மர்ம கும்பல் பேசியது. அப்போது சிறுமியை உயிருடன் வேண்டும் என்றால் தங்களுக்கு ரூ.50 லட்சம் தர வேண்டும் என கூறி மிரட்டி விட்டு இணைப்பை துண்டித்தனர்.

இந்த சம்பவம் நாமக்கல் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி, சிறுமியை பத்திரமாக மீட்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தார்.

அதன்படி டி.எஸ்.பி. தலைமையில், 7 தனிப்படைகள் அமைத்தார். மேலும் வாகன சோதனைகளை தீவிரப்படுத்தினார். சைபர் கிரைம், உளவு பிரிவு போலீசாரை உஷார் படுத்தினார்.

தொடர்ந்து தனிப்படை போலீசார் எருமப்பட்டி, புதுக்கோட்டை, காளிசெட்டிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிறுமியை தேடினர். மேலும் இது தொடர்பாக டி.எஸ்.பி சுரேஷ், வாட்ஸ்அப்பில் விழிப்புணர்வு ஆடியோவை வெளியிட்டு சிறுமியை தேடி வந்தார்.

இதனிடையே போலீசாருக்கு பயந்து கடத்தல் கும்பல், அலங்காநத்தம் பெட்ரோல் பங்க் அருகில் சிறுமியை விடுவித்தனர். அப்போது தங்களை பற்றி ஏதாவது போலீசாரிடம் சொன்னால் உன்னையும், உனது குடும்பத்தையும் விட மாட்டோம். கொன்று விடுவோம் என மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

பின்னர் தனியாக நின்ற சிறுமி நடந்து சென்று அப்பகுதி மக்களிடம் கடத்தல் சம்பவத்தை தெரிவித்தார். இதையடுத்து தனிப்படையினர் அங்கு வேகமாக சென்று சிறுமியை பத்திரமாக மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்தனர். அப்போது சிறுமி, தனது அம்மாவை கண்ணீர் மல்க கட்டிப்பிடித்து அழுதது. கவுசல்யா, தனது மகளின் முகத்தில் முத்தமிட்டு, பாசமழை பொழிந்தார். மேலும் கவலைபடாதே கண்ணே, நம்மை பாதுகாக்க போலீசார் இருக்கிறார்கள். அவர்கள் கடத்தல் கும்பலை பார்த்து கொள்வார்கள் என கூறி தனது மகளுக்கு ஆறுதல் கூறினார். மேலும், கவுசல்யாவும், சரவணனும் தங்கள் மகளை பத்திரமாக மீட்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி, டி.எஸ்.பி.சுரேஷ் மற்றும் தனிப்படை போலீசாருக்கு நன்றி தெரிவித்தனர்.

கடத்தல் கும்பலின் கொலை மிரட்டலுக்கு அஞ்சாத சிறுமி துணிச்சலுடன் கடத்தல் கும்பல் குறித்த அடையாளங்களை போலீசாரிடம் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து போலீசார் துரித விசாரணை நடத்தினர். விசாரணையில் காளிசெட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்த உறவினர்கள் மணிகண்டன் மற்றும் அவரது மனைவி பொன்னுமணி ஆகியோர் சிறுமியை கடத்தியது தெரியவந்தது. கடத்தலில் மேலும் சில வாலிபர்கள் இடம்பெற்றுள்ளதும் தெரியவந்தது.

இதையடுத்து தனிப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணிகண்டன் பொன்னுமணி தம்பதியை அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கைதான மணிகண்டன் சொந்தமாக லாரி வைத்து தொழில் செய்து வந்தார். லாரி தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், லாரியை விற்று விட்டு, லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், சரவணனுக்கும் தொழில் சம்பந்தமாக பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை இருந்துள்ளது. இதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக சரவணனின் மகளை கடத்தி பணம் பறிக்க மணிகண்டன் திட்டமிட்டுள்ளார். அதன்படி மணிகண்டன் பொன்னுமணி சேர்ந்து சிறுமியை கடத்தி சென்று வீட்டில் வைத்துள்ளனர். முதலில் போலீசார் சந்தேகத்தின் பேரில் அவர்களிடமும் விசாரணை நடத்தினர். ஆனால் அப்போது அவர்கள் இது பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை.

பின்னர் விசாரணையை தீவிரபடுத்தப்பட்டது. இதனால் பயந்து போன மணிகண்டன் அலங்காநத்தம் பெட்ரோல் பங்க் அருகே சிறுமியை காரில் விட்டு விட்டு சென்றுள்ளார். அதன் பிறகு சிறுமி கொடுத்த தகவலின் பேரில் கடத்தல் கும்பல் பிடிபட்டது குறிப்பிடக்கத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com