அடகு வைத்த தங்க நகைகளில் நூதன மோசடி- பேளூர் கூட்டுறவு சங்கத்தில் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை

பேளூர் கூட்டுறவு சங்கத்தில் அடகு வைத்த தங்க நகைகளில் நூதன மோசடி செய்தது தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூட்டுறவு துறை அதிகாரி விசாரணை நடத்தியதை படத்தில் காணலாம்.
கூட்டுறவு துறை அதிகாரி விசாரணை நடத்தியதை படத்தில் காணலாம்.
Published on

வாழப்பாடி:

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள பேளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 5 சவரனுக்குள் அடகு வைத்த நகைக்கடன்களை தமிழக அரசு தள்ளுபடி செய்தது. இதனையடுத்து, கடன் தள்ளுபடி பெற்ற பயனாளிகளுக்கு, தங்க நகைகள் திருப்பி வழங்கப்படுகிறது.

இதனிடையே இங்கு நகை அடகு வைத்திருந்த பெத்தநாயக்கன்பாளையம் கிராங்காடு வெங்கடேசன் மனைவி லலிதா, வாழப்பாடி அருகே பெரியகுட்டிமடுவு ரமேஷ் உள்ளிட்ட சிலர் தங்களது தங்க நகைகளை திருப்பி வாங்கி சென்றனர்.

இந்த தங்க நகைகளில், சாதாரணமாக பார்த்தால் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு சிறு சிறு நகை துண்டுகளை வெட்டி எடுத்து நூதன மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள், பேளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன் நேற்று இரவு குவிந்தனர். இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த சேலம் மாவட்ட கூட்டுறவு துணை பதிவாளர் யோகேவிஷ்ணு உள்ளிட்ட அதிகாரிகள், பாதிக்கப்பட்ட பொதுமக்களிடமும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ஊழியர்களிடமும் இரவோடு இரவாக விசாரணை நடத்தினார்.

‘தங்க நகையில் சிறு சிறு பகுதிகள் வெட்டி எடுக்கப்பட்டு எடை குறைவதாக பொதுமக்கள் சிலர் புகார் தெரிவித்து குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இதேபோல கடந்த சில ஆண்டுகளுக்கு முன், இதே கூட்டுறவு வங்கியில் புகார் வந்தது. விசாரணை முடிந்தால் தான், மோசடி நடந்ததா? என உறுதியாக தெரியவரும். கடன் சங்க ஊழியர்கள், தங்க நகைகளில் மோசடி செய்திருப்பது தெரிய வந்தால் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

இந்த விவகாரம் தொடர்பாக இன்று 2-வது நாளாக விசாரணை நடத்தப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏர்படுத்தியது. 

X

Maalai Malar
www.maalaimalar.com