அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கார், வாகனம் தீ வைத்து எரிப்பு: பதட்டம் நிலவுவதால் போலீசார் குவிப்பு

பொன்னம்பலம் தரப்பிற்கு சொந்தமான பண்ணை வீட்டில் பீரோவை உடைத்து 5 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.5 லட்சம் ரொக்க பணம், பத்திரப்பதிவு ஆவணங்கள் ஆகியவற்றை மர்ம கும்பல் திருடி சென்றது.கொள்ளை குறித்து பொன்னம்பலத்தின் மனைவி பழனியம்மாள் சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கார், வாகனம் தீ வைத்து எரிப்பு: பதட்டம் நிலவுவதால் போலீசார் குவிப்பு
Published on

மதுரை :

மதுரை மாவட்டம் சத்திரப்பட்டி அருகே உள்ளது கருவனூர் கிராமம். இங்குள்ள பத்ரகாளி அம்மன், பாரை கருப்பு அய்யனார் கோவிலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற திருவிழாவில் ஊர் முக்கியஸ்தர்களுக்கு முதல் மரியாதை அளிக்கப்படுவது வழக்கம்.

இந்த முதல் மரியாதையை பெற்றுக்கொள்வது தொடர்பாக அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னம்பலத்தின் மருமகனுக்கும், அதே பகுதி தி.மு.க.வைச் சேர்ந்த வேல்முருகன் தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்தநிலையில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னம்பலம் வீட்டின் முன்பு மர்மகும்பல் கற்களை வீசி எரிந்தும் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக், கார் உள்ளிட்டவற்றை தீ வைத்து எரித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த பொன்னம்பலம் தரப்பினரும், வேல்முருகன் தரப்பினரும் மோதிக்கொண்டதில் பொன்னம்பலத்தின் மருமகன் பழனிக்குமார், சுப்பையா, சூர்யா, விஜய், வேல்விழி மற்றும் வேல்முருகன் தரப்பைச் சேர்ந்த சிலருக்கும் காயங்கள் ஏற்பட்டது.

இது தொடர்பாக சத்திரப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து இரு தரப்பையும் சேர்ந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 38 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில் பொன்னம்பலம் தரப்பிற்கு சொந்தமான பண்ணை வீட்டில் பீரோவை உடைத்து 5 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.5 லட்சம் ரொக்க பணம், பத்திரப்பதிவு ஆவணங்கள் ஆகியவற்றை மர்ம கும்பல் திருடி சென்றது. இது குறித்து பொன்னம்பலத்தின் மனைவி பழனியம்மாள் சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் நடந்து சில மாதங்கள் ஆன நிலையில் இன்று அதிகாலை அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பொன்னம்பலம் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் டாட்டா ஏஸ் வாகனம் ஆகியவற்றிற்கு மர்மகும்பல் நள்ளிரவில் தீ வைத்துள்ளது. இதில் அந்த வாகனங்கள் கொளுந்து விட்டு எரிந்தது. இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் அந்த வாகனங்கள் முழுவதும் எரிந்து சேதமடைந்தது. கோவில் திருவிழாவில் ஏற்பட்ட முன் விரோதத்தால் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட தொடர் மோதலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அங்கு பதட்டம் நிலவுவதால் சம்பவம் நடந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com