வாலிபரை ஓரின சேர்க்கைக்கு அழைத்து செல்போன்-பணம் பறிப்பு- கல்லூரி மாணவர்கள் உள்பட 5 பேர் கைது

திருப்பூரில் ஓரின சேர்க்கைக்கு அழைத்து நூதன முறையில் செல்போன் , பணம் பறித்த கல்லூரி மாணவர்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

திருப்பூர்:

திருப்பூர் பல்லடம் ரோடு வித்யாலயம் பகுதியை சேர்ந்தவர் பாலகுரு (வயது 28). இவர் செல்போனில் ஒரு ஆப்பை பதிவிறக்கம் செய்தார். பின்னர் அதற்குள் சென்று பார்த்த போது 19 வயதான வாலிபர் ஒருவர் பேசியுள்ளார். அவர் பாலகுருவிடம் உங்களுக்கு ஓரின சேர்க்கையில் ஈடுபட விருப்பம் உள்ளதா? விருப்பம் இருந்தால் கூறுங்கள். அதற்கான ஏற்பாடுகளை செய்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

பாலகுருவும் ஓரின சேர்க்கையில் ஈடுபட விருப்பம் தெரிவிக்கவே, அந்த வாலிபர் திருப்பூர் செல்லம்நகர் பிரிவில் இருந்து பாரப்பாளையம் செல்லும் சாலையில் உள்ள காலி இடத்திற்கு வருமாறு அழைத்துள்ளார்.

இதையடுத்து பாலகுரு சம்பவ இடத்திற்கு சென்றார். அப்போது அங்கு 19 வயது வாலிபருடன் அவரது நண்பர்கள் 4 பேர் வந்தனர். அவர்கள் பாலகுருவை சரமாரி தாக்கியதுடன் அவர் வைத்திருந்த விலை உயர்ந்த செல்போன் மற்றும் ரூ.3ஆயிரம் பணம் ஆகியவற்றை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இது குறித்து பாலகுரு திருப்பூர் மத்திய போலீசில் புகார் செய்தார். போலீசார் பாலகுருவை ஓரின சேர்க்கைக்கு அழைத்து நூதன முறையில் செல்போன் , பணம் பறித்த வாலிபர்கள் யாரென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் திருப்பூர் பகுதியை சேர்ந்த சாரதி, மணிகண்டன், யுவராஜ், கவுதம், மவுலி ஆகிய 5பேர் என்பது தெரியவந்தது. இதையடுத்து 5பேரையும் போலீசார் கைது செய்தனர். இதில் 2பேர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியிலும், மற்ற 3பேர் திருப்பூர் சிறையில் அடைக்கப்பட்டனர். கைதானவர்களில் 3பேர் கல்லூரி மாணவர்கள் ஆவர்.

X

Maalai Malar
www.maalaimalar.com