

வானூர்:
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே கோட்டக்குப்பம் போலீஸ் சரகம் சின்னமுதலியார் சாவடியை சேர்ந்த மீனவர்கள் மூர்த்தி (வயது 60), அறிவு, பார்திபன், ஜெயபால் ஆகியோர் இன்று அதிகாலை பைபர் படகில் மீன் பிடிப்பதற்காக கடலுக்கு சென்றனர்.
நடுக்கடலில் வலைவீசி மீன்பிடித்தபோது கடல் சீற்றம் அதிகம் காணப்பட்டது. இதனால் ராட்சத அலை எழும்பியது. அலையின் கோரப்பிடிக்கு தாக்குபிடிக்காமல் நடுகடலில் படகு கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த 4 மீனவர்களும் கடலில் தத்தளித்தனர்.
இவர்களில் அறிவு, பார்த்திபன், ஜெயபால் ஆகியோர் நீந்தி கரைக்குவந்து சேர்ந்தனர். அவர்கள் ஊருக்குள் இந்த தகவலை தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த மீனவர்கள் உடனடியாக 20-க்கும் மேற்பட்ட படகுகளில் கடலுக்கு சென்றனர்.
அவர்கள் நடுகடலில் வலையை வீசினர். அப்போது வலையில் மூர்த்தி உடல் சிக்கியது. உடனடியாக அவரது உடலை கரைக்கு கொண்டுவந்தனர். இதனை அறிந்த உறவினர்கள் மூர்த்தியின் உடலை பார்த்து கதறிதுடித்தனர்.
இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. இதனால் மீனவ கிராம மக்கள் ஆத்திரம் அடைந்தனர். பின்னர் மீனவர் மூர்த்தியின் உடலை மீனவ கிராம மக்கள் புதுவை-மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலைக்கு காண்டுவந்தனர். அங்கு உடலை நடுரோட்டில் கிடத்தி மறியல் செய்தனர். அப்போது தூண்டில் வளைவு அமைக்க கோரி கோஷம் போட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்த கோட்டக்குப்பம் போலீசார் அங்கு விரைந்தனர். அப்போது மீனவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் மீனவர்கள் கூறுகையில், பல ஆண்டுகளாக சின்னமுதலியார் சாவடியில் தூண்டில் வளைவு அமைக்ககோரி போராடி வருகிறோம். அலை சீற்றத்தால் எங்களது படகுகள் கூட நிறுத்த இடம் இல்லை என்று ஆவேசப்பட்டனர்.
உடனே போலீசார் இதுபற்றி உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றனர். ஆனாலும் மீனவர்கள் சமரமடையாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.