திருத்தணியில் நிதி நிறுவன ஊழியர் காரில் கடத்தல்- துப்பாக்கியுடன் 2 பேர் கைது

திருத்தணியில் நிதி நிறுவன ஊழியர் காரில் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து 2 பேரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

திருத்தணி:

திருத்தணி அடுத்த தும்பிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சம்பத். இவரது மகன் லோகநாதன். தனியார் நிதி நிறுவனத்தில் ஏஜெண்டாக பணிபுரிந்து வந்தார். இந்த நிதிநிறுவனத்தில் ஏராளமானோர் பணம் கட்டி இருந்தனர். இதில் பணம் கட்டியவர்கள் சிலருக்கு பணம் கொடுக்கவில்லை என்று தெரிகிறது. இதுபற்றி லோகநாதனிடம் பணம்கட்டியவர்கள் அடிக்கடி கேட்டு வந்தனர்.

இந்தநிலையில் நேற்று இரவு வீட்டில் இருந்த லோகநாதனை காரில் வந்த மர்ம கும்பல் வலுக்கட்டாயமாக ஏற்றி கடத்தி சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த லோகநாதனின் தம்பி பாலாஜி திருத்தணி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். தனிப்படை போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.

இதற்கிடையே திருத்தணி , அரக்கோணம் சாலையில் உள்ள சரஸ்வதி நகர் சோதனை சாவடியில் நேற்று இரவு இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அரக்கோணத்தில் இருந்து திருத்தணியை நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது கடத்தப்பட்ட லோகநாதன் இருப்பது தெரிந்தது.

இதையடுத்து அவரை போலீசார் மீட்டு காரில் இருந்த மேலும் 2 பேரை கைது செய்தனர்.

அவர்கள் திருத்தணி தாலுகா கூளூர் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 31), ராமபுரம் பகுதியை சேர்ந்த பால்ராஜ் (வயது 33) என்பது தெரிந்தது. அவர்களிடம் ஒரு நாட்டு துப்பாக்கி , 2 ஆக்சா பிளேடுகளும் இருந்தன. காருடன் அவற்றை பறிமுதல் செய்தனர்.

பணத்தகராறில் இந்த கடத்தல் நடந்திருப்பது தெரிந்தது. கைதான 2 பேரிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இதில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்து உள்ளது. அவர்களை பற்றியும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com