சிறை வைக்கப்பட்டுள்ள மகளை மீட்டுத்தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயற்சி

மகளை ஒரு மர்ம கும்பல் சட்டவிரோதமாக தனி அறையில் அடைத்து வைத்து உள்ளது. மாவட்ட நிர்வாகம் விவகாரத்தில் தலையிட்டு, என் மகளை மீட்டு தர வேண்டும் என்று விவசாயி தெரிவித்தார்.
தீக்குளிக்க முயன்ற விவசாயி முனிராஜ்.
தீக்குளிக்க முயன்ற விவசாயி முனிராஜ்.
Published on

மதுரை:

மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள சூரக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் முனிராஜ் (வயது 39). விவசாயியான இவர் இன்று காலை மனைவியுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் அவர் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தார்.

இதனைத் தொடர்ந்து போர்டிகோ வாசலுக்கு வந்த முனிராஜ் யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென்று தான் கொண்டு வந்திருந்த மண்எண்ணையை எடுத்து தன் உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் விரைந்து செயல்பட்டு முனிராஜை தடுத்து காப்பாற்றினர். பின்னர் அவரை அங்கிந்தவர்கள் போலீசில் ஒப்படைத்தனர்.

இதனைத் தொடர்ந்து தல்லாக்குளம் போலீசார் முனிராஜிடம் விசாரித்தனர். அப்போது அவர், "என் மகளை ஒரு மர்ம கும்பல் சட்டவிரோதமாக தனி அறையில் அடைத்து வைத்து உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இந்த விவகாரத்தில் தலையிட்டு, என் மகளை மீட்டு தர வேண்டும்" என்று தெரிவித்தார். தொடர்ந்து முனிராஜை போலீசார், காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி மண்எண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com