நிலத்தரகர் கொலையில் விவசாயி கைது- மேலும் 5 பேருக்கு வலைவீச்சு

பாளை அருகே நிலத்தரகர் கொலையில் சம்பந்தப்பட்ட பாளையம் செட்டி குளத்தைச் சேர்ந்த செல்வராஜ், பிரபாகரன் உள்பட மேலும் அவரது ஆதரவாளர்கள் 5-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கைது
கைது
Published on

நெல்லை:

பாளை அருகே உள்ள பாளையம் செட்டிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் வைகுண்டம் (வயது 46). நிலத்தரகர்.

நேற்று காலை வைகுண்டம்பாளையம் செட்டிகுளத்தில் உள்ள பாளையம் கால்வாயில் குளிக்க சென்றபோது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் அவரை சரமாரியாக சுற்றிவளைத்து அரிவாளால் வெட்டி கொலை செய்தது.

சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சுரேஷ்குமார், டி.எஸ்.பி. ஜெபராஜ், இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினார்கள்.  மேலும் கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தினார்கள். இதில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வைகுண்டத்தின் நண்பர் ஒருவரை  ஒரு கும்பல் வெட்டிக்கொலை செய்ய முயற்சி செய்தது. இதுதொடர்பான வழக்கு நெல்லை கோர்ட்டில் நடந்து வருகிறது. இதில் வைகுண்டம் முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட்டு இருந்தார்.

இதனால் எதிர்த்தரப்பில் வைகுண்டத்தை சாட்சி சொல்லக்கூடாது என்று கூறிவந்தனர்.

இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நெல்லை கோர்ட்டில் வைகுண்டம் சாட்சி கூறுவதாக இருந்தது. இதற்காக அவர் நேற்று காலையிலேயே அந்த பகுதியில் உள்ள பாளையம் கால்வாயில் குளிக்கச் சென்றபோது, கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் இவரை வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து கொலையாளிகளை விரைந்து கைது செய்ய 3 தனிப்படைகள் அமைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பு சுரேஷ்குமார் உத்தரவிட்டார். டி.எஸ்.பி. ஜெபராஜ், இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், பத்மநாப பிள்ளை ஆகியோர் தலைமையில் இந்த 3 தனிப்படை போலீசாரும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினார்கள்.

இதில் சம்பவம் நடந்த சில மணி நேரங்களில் கொலைக்கு உடந்தையாக இருந்த பாளையம் செட்டி குலத்தைச் சேர்ந்த ராஜன் (வயது 67) என்ற விவசாயியை போலீசார் கைது செய்தனர்.

மேலும் வைகுண்டம் கொலையில் சம்பந்தப்பட்ட பாளையம் செட்டி குளத்தைச் சேர்ந்த செல்வராஜ், பிரபாகரன் உள்பட மேலும் அவரது ஆதரவாளர்கள் 5-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட வைகுண்டத்தின் உடல் இன்று பிரேத பரிசோதனை முடிந்து அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து பாளையம் செட்டிகுளம் மற்றும் சுற்றுப் பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க அந்த பகுதி முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com