சிவகாசியில் 500 ரூபாய் கள்ள நோட்டுகளுடன் 5 பேர் கைது

சிவகாசியில் 500 ரூபாய் கள்ள நோட்டுகளுடன் 5 பேரை கைது செய்த போலீசார் காரையும் பறிமுதல் செய்தனர்.
கைது
கைது
Published on

விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள வேண்டுவராயபுரத்தை அடுத்த மாலையூரணிப்பட்டியைச் சேர்ந்தவர் காளிமுத்து (வயது 55). இவர் திருத்தங்கல் பாண்டியன் நகரைச் சேர்ந்த சீமைச்சாமி (52) என்பவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.3 லட்சம் கடன் கொடுத்துள்ளார்.

இதனை திருப்பி கேட்டபோது சீமைச்சாமி விரைவில் தருவதாக கூறி வந்தார்.

இந்த நிலையில் அவர் நேற்று காளிமுத்துவை சந்தித்து ரூ.3 லட்சத்தை கொடுத்தார். அவர் கொடுத்தது அனைத்தும் புத்தம் புதிய 500 ரூபாய் நோட்டுகள் ஆகும். சீமைச்சாமி கொடுத்த ரூபாய்கள் குறித்து காளிமுத்துவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து அவர் திருத்தங்கல் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் சீமைச்சாமியை பிடித்து விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பேசினார்.

மேலும் அங்கு நின்ற காரை சோதனை செய்தபோது அதில் 500 ரூபாய் நோட்டுகள் இருந்தது தெரியவந்தது. அந்த ரூபாய் நோட்டுகளில் “சில்ரன்ஸ் பேங்க் ஆப் இந்தியா” என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆய்வில் அவை அனைத்தும் கள்ள நோட்டுகள் என தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சீமைச்சாமியை போலீசார் கைது செய்தனர். மேலும் அவருக்கு உடந்தையாக கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட தேனி மாவட்டம், காஞ்சிபட்டியைச் சேர்ந்த சரவணன் (42), உத்தமபாளையம், சிலையம்பட்டி காளிராஜன் (31), உசிலம்பட்டியைச் சேர்ந்த சங்கர் என்ற சங்கரபாண்டி (40), மதுரை தத்தனேரி மருது (33) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கள்ள நோட்டு இருந்த காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

இவர்கள் கள்ள நோட்டுகளை எங்கிருந்து கொண்டு வந்தார்கள்? வேறு எங்காவது புழக்கத்தில் விட்டுள்ளார்களா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com