

திருவொற்றியூர்:
எர்ணாவூர், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ஹரிகுமார். வக்கீலான இவர் தி.மு.க வழக்கறிஞர் பிரிவில் மாவட்ட துணை அமைப்பாளராக உள்ளார்.
நேற்று இரவு அவர் திருவொற்றியூரில் இருந்து வீட்டுக்கு காரில் வந்து கொண்டிருந்தார். காரை டிரைவர் ராம்குமார் ஓட்டினார்.
எர்ணாவூர் அருகே வந்தபோது 3 மோட்டார் சைக்கிள்களில் ஹெல்மெட் அணிந்து வந்த 6 பேர் கும்பல் திடீரென காரை வழிமறித்து கல்வீசியும், அரிவாளாலும் தாக்கினர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஹரிகுமாரும், டிரைவர் ராம்குமாரும் கொலை வெறிகும்பலிடம் இருந்து தப்பி ஓடினர். அப்போது மர்ம நபர்கள் வெட்டியதில் ஹரிகுமாரின் தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதற்குள் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டதால் மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இந்த தாக்குதலில் காரின் கண்ணாடிகள் முழுவதும் நொறுங்கியது. பலத்த காயம் அடைந்த ஹரிகுமார் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இதுகுறித்து எண்ணூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியைச் சேர்ந்த ராம்கி உள்பட 6 பேரை தேடி வருகின்றனர். தாக்குதலுக்கான காரணம் குறித்தும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.