வாலிபரின் நிர்வாண படங்களை வெளியிடுவதாக மிரட்டி பணம் பறித்த என்ஜினீயரிங் மாணவர் கைது

பேஸ்புக்கில் பெண்போல் பழகி 20-க்கும் மேற்பட்டோரை ஆபாசமாக பேசி பணம் பறித்த என்ஜினீயரிங் மாணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த பட்டரைபெருமந்தூரைச் சேர்ந்த 32 வயது வாலிபர் திருவள்ளூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார்.

இவர் பேஸ்புக்கில் இருந்த ஆபாச பக்கத்துக்கு சென்ற போது அதில் கேட்கப்பட்ட தனது விவரங்களை பதிவு செய்தார்.

இதைத் தொடர்ந்து அவரை தொடர்பு கொண்டு பெண் போல் ஒருவர் பேசினார். பின்னர் இருவரும் தங்களது வாட்ஸ்அப் எண்களை பரிமாறி பேசி வந்தனர். ஒரு கட்டத்தில் இருவரும் தங்களது ஆபாச படங்களை பகிர்ந்து கொண்டனர்.

இந்த நிலையில் பெண் போல பேசிய நபர், வாலிபரின் செல்போன் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி லிங்க்கை அனுப்பினார். அதனை வாலிபர் கிளிக் செய்ததும் அவரது போன் ஹேக் செய்யப்பட்டது. செல்போனில் இருந்த அனைத்து வீடியோக்களும் எடுக்கப்பட்டன.

இதற்கிடையே பெண் போல பேசிய நபர் திடீரென வாலிபரை மிரட்ட தொடங்கினார். செல்போனில் இருந்த வாலிபரின் நிர்வாண படங்களை உறவினர்களுக்கு அனுப்பி விடுவதாக மிரட்டினார்.

ஆபாச படங்களை அனுப்பாமல் இருக்க அவ்வப்போது ரூ.2 ஆயிரம், ரூ.5 ஆயிரம் என்று மிரட்டி வாங்கினார். ஒரு கட்டத்தில் மிரட்டல் அதிகரித்ததால் அந்த வாலிபர் இதுபற்றி திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண் குமாரிடம் புகார் செய்தார்.

இதுபற்றி விசாரிக்க அவர் சைபர்கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டார். போலீசார் வாலிபருக்கு மிரட்டல் விடுத்து பேசிய நபரின் செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தினர்.

அடிக்கடி செல்போன் எண்ணை மாற்றி வந்ததால் அந்த நபரை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. ஒரு மாதத்துக்கும் மேலாக மோசடி நபரின் செல்போன் எண்ணை கண்காணித்து வந்தனர்.

இதில் பணம் கேட்டு மிரட்டியது ராணிப்பேட்டை மாவட்டம் தெக்கால் அருகே உள்ள புளியங்கன்னு கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் நரேந்திரநாத் என்பது தெரிந்தது.

அவர் வேலூரில் என்ஜினீயரிங் கல்லூரியில் மெக்கானிக்கல் 2-ம் ஆண்டு படித்து வருவதும் தெரிய வந்தது. அவரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

அவர் இதே போல் 20-க்கும் மேற்பட்ட வாலிபர்களின் செல்போன்களை ஹேக் செய்து பணம் பறித்து இருக்கிறார். லட்சக்கணக்கில் பணம் பறித்தால் மாட்டிக் கொள்வோம் என்பதால் ரூ.20 ஆயிரம் வரை இலக்கு வைத்து கைவரிசை காட்டி உள்ளார்.

கைதான நரேந்திரநாத் பேஸ்புக்கில் உள்ள ஆபாச வலைதளத்துக்கு வரும் நபர்களை குறி வைத்து தனது மோசடியை அரங்கேற்றி உள்ளார்.

முதலில் பெண் போல் சாட்டிங் செய்யும் அவர் பின்னர் அவர்களது செல்போன் எண் வாட்ஸ் அப் எண்களை வாங்கி காதல் வலைவீசி பேசினார். பெண் குரல் போல் பேசுவதற்காக புதிய ஆப் ஒன்றையும் அவர் பயன்படுத்தி இருக்கிறார்.

இதில் மயங்கும் வாலிபர்களிடம் வீடியோ காலில் பேசும்போது இணைய தளத்தில் உள்ள ஏதாவது ஒரு பெண்ணின் ஆபாச படத்தை அனுப்பிவிட்டு தனது படம் என்று கூறி நம்ப வைப்பார்.

இதனை நம்பி சபலத்தில் விழும் வாலிபர்களிடம் அவர்களது நிர்வாண, ஆபாச படத்தையும் அனுப்புமாறு கேட்பார். வாலிபர்கள் தங்களது ஆபாச படத்தை அனுப்பியதும் அதனை பதிவு செய்து விட்டு அவர்களது செல்போனை ஹேக் செய்வதற்காக லிங்க்கை அனுப்புவார்.

அதனை அவர்கள் கிளிக் செய்ததும் செல்போனில் உள்ள அனைத்து விவரங்களும் நரேந்திர நாத்துக்கு கிடைத்து விடும். இதன்பின்னர் வழக்கம் போல் நிர்வாண படத்தை உறவினர்களுக்கு அனுப்புவதாக மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார்.

பெரிய அளவில் பணத்தை இழக்காததாலும் வெளியே தெரிந்தால் அவமானம் ஆகிவிடும் என்பதாலும் அவரிடம் ஏமாந்த வாலிபர்கள் புகார் செய்யாமல் இருந்துள்ளனர்.

பட்டரைபெருந்தூரைச் சேர்ந்த வாலிபர் புகார் செய்ததால் நரேந்திரநாத் சிக்கிக் கொண்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com