

சென்னை:
சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கோவிந்தசாமி நகர் இளங்கோ தெருவில் வீடுகளை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில நாட்களாகவே அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த கண்ணையன் என்பவர் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து இன்று திடீரென தீக்குளித்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தீயை அணைத்து அவரை மீட்டனர். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட கண்ணையனுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தீக்காயங்களுடன் கண்ணையன் உயிருக்கு போராடும் வீடியோ வெளியாகி பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. வீடுகளை இடிப்பதற்கு மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பறக்கும் ரெயில் மேம்பாலத்தில் ஏறி நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது ரேஷன் கார்டு உள்ளிட்ட அடையாள அட்டைகளை திருப்பி ஒப்படைக்கவும் முடிவு செய்திருந்தனர். இந்த நிலையில் கண்ணையன் தீக்குளித்துள்ள சம்பவம் ராஜா அண்ணாமலை புரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தீக்குளித்த கண்ணையன் (வயது 58) ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்தவர். தென் சென்னை கிழக்கு மாவட்ட துணை செயலாளராக இருக்கிறார். பாட்டாளி மக்கள் கட்சி வீடு கட்டுவதற்கான கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்து வரும் இவருக்கு சக்தி (வயது 56) என்ற மனைவியும் சுரேஷ் (வயது 38) என்ற மகனும் கலையரசி (வயது 36) என்கிற மகளும் உள்ளனர்.
கோவிந்தசாமி தெருவில் குடியிருக்கும் கண்ணையனின் வீடும் இடிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் வேதனை அடைந்து தனக்குத்தானே தீவைத்துக் கொண்டார். 90 சதவீத தீக்காயங்களுடன் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 90 சதவீதம் தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளதால் கண்ணையன் உயிர் பிழைப்பது கடினம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.