தூத்துக்குடியில் முதியவர் வெட்டிக்கொலை- உறவினர்கள் 3 பேர் கைது

சமீபகாலமாக மாரி-முத்துமாலைக்கிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.இதுதொடர்பாக இரண்டு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
தூத்துக்குடியில் முதியவர் வெட்டிக்கொலை- உறவினர்கள் 3 பேர் கைது
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி திரேஸ்புரம் மாதவமாயன் காலனியை சேர்ந்தவர் முனியசாமி (வயது 70), மீனவர்.

இவரது மனைவி கன்னியம்மாள். இவர்களுக்கு 2 மகன், 2 மகள்கள் உள்ளனர். கடைசி மகன் மணிமன்னன். இவருக்கு திருமணமாகி முத்துமாலை (20) என்ற மகள் உள்ளார்.

இவருக்கும் திரேஸ்புரத்தை சேர்ந்த மாரி (24) என்பவருக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

சமீபகாலமாக மாரி-முத்துமாலைக்கிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இதுதொடர்பாக இரண்டு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று மாலை முனியசாமி தனது பேத்தி முத்துமாலையை பார்ப்பதற்காக திரேஸ்புரம் சென்றார்.

அப்போது அங்கிருந்த மாரியின் சகோதரர்கள் சின்னத்தம்பி, சேர்மன் மற்றும் அவரது உறவினரான லூர்தம்மாள்புரத்தை சேர்ந்த ஓட்டை என்ற கருப்பசாமி ஆகிய 3 பேரும் எப்படி இங்கே வரலாம் என கேட்டு தகராறில் ஈடுபட்டனர்.

தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த 3 பேரும் வாளால் சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் முனியசாமி கீழே சரிந்து விழுந்தார்.

இதற்கிடையே முனியசாமியை தேடி அவரது குடும்பத்தினர் திரேஸ்புரம் வந்தனர்.

அங்கு ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வடபாகம் இன்ஸ்பெக்டர் தனபால் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் இன்று காலை சின்னத்தம்பி, சேர்மன், ஓட்டை என்ற கருப்பசாமி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com