

சென்னை:
தஞ்சை தேர் திருவிழாவில் மின்கம்பி உரசியதில் 11 பேர் பலியான சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்துக்கு சட்டசபையில் இன்று முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
சட்டசபை இன்று காலை கூடியதும் இந்த சம்பவம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் அதிகாலையில் நடைபெற்ற தேர் திருவிழாவின்போது எதிர்பாராதவிதமாக தேர் உயர்அழுத்த மின்கம்பியில் உரசியதில் 11 பேர் உயிரிழந்தது அதிர்ச்சி அளிக்கிறது.
இதில் காயம் அடைந்தவர்கள் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்க வலியுறுத்தி உள்ளேன்.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அதிகாரிகளை சம்பவ இடத்துக்கு அனுப்பி வைத்துள்ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 5 லட்சம் ரூபாயை முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
இன்று நான் அங்கு நேரில் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவிக்கவும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை சந்திக்கவும் உள்ளேன்.
இந்த விவாதத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபத்தை தெரிவிக்கும் தீர்மானத்தை முன்மொழிகிறேன்’ என்றார்.
இதைத்தொடர்ந்து உறுப்பினர்கள் அனைவரும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.