ஸ்ரீபெரும்புதூர் அருகே சோகம்: திருமணம் செய்த காதலியை பிரித்ததால் கல்லூரி மாணவர் தற்கொலை

கடந்த சில நாட்களுக்கு முன்பு சஞ்சய் தனது காதலியுடன் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. காதலியை பிரித்ததால் கல்லூரி மாணவர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் அருகே சோகம்: திருமணம் செய்த காதலியை பிரித்ததால் கல்லூரி மாணவர் தற்கொலை
Published on

ஸ்ரீபெரும்புதூர்:

ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள புதுப்பேர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயசங்கர். இவரது மகன் சஞ்சய் (வயது21). பல்லாவரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இவரும் புதுப்பேர் அருகே உள்ள சக்திநகரில் வசிக்கும் இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு கடும் எதிர்ப்புஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த சஞ்சய் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் இதுபற்றி போலீசுக்கு தெரிவிக்காமல் உடலை எரிக்க முடிவு செய்தனர்.

அதன்படி சஞ்சய் உடலை அப்பகுதியில் உள்ள சுடுகாட்டில் வைத்து எரிக்க தொடங்கினர். இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்ததும் சோமங்கலம் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் பாதி எரிந்த நிலையில் இருந்த மாணவர் சஞ்சயின் உடலை மீட்டனர். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் காதல் திருமணம் செய்த காதலியை பிரித்ததால் மனவேதனையில் சஞ்சய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருப்பது தெரிய வந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சஞ்சய் தனது காதலியுடன் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி சோமங்கலம் போலீசில் புகார் அளித்து உள்ளனர். அப்போது ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு வீட்டில் தங்கி இருந்த சஞ்சய் மற்றும் இளம்பெண்ணை போலீசார் மீட்டு விசாரித்தனர். பின்னர் சஞ்சய்யிடம் இருந்து பிரித்து காதலியை அவரது பெற்றோருடனும் அனுப்பியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த சஞ்சய் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருப்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக இரு தரப்பு பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர். காதலியை பிரித்ததால் கல்லூரி மாணவர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com