கொடுமுடி அருகே காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி

கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு காவிரி ஆற்றில் மூழ்கி 3 வாலிபர்கள் இறந்தது குறிப்பிடத்தக்கது.
கொடுமுடி அருகே காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி
Published on

கொடுமுடி:

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த சத்திய நாயக்கன் பாளையம், திருவள்ளுவர் காலனியை சேர்ந்தவர் காந்தி (வயது55). இவர் பெயிண்டர் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இதில் இளைய மகன் மேகராஜ் (19) தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. 3-ம் ஆண்டு படி த்து வந்தார்.

இந்நிலையில் நேற்று காந்தி தனது உறவினர் வீட்டு கிடா விருந்துக்காக இளைய மகன் மேகராஜை அழைத்துக்கொண்டு ஈரோடு மாவட்டம் பாசூர் அருகே உள்ள சங்கிலிகருப்பண்ணசாமி கோவிலுக்கு சென்றுள்ளார். கிடா விருந்தில் கலந்து கொண்டு விட்டு மேகராஜ் மற்றும் உறவினர்கள் 10 பேர் சங்கிலி கருப்பண்ணசாமி கோவிலுக்கு முன்பாக உள்ள காவிரி ஆற்றில் குளிக்க சென்றனர்.

அங்கு மேகராஜ் மற்றும் உறவினர்கள் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது திடீரென மேகராஜ் நீரில் மூழ்க தொடங்கினார். அவருக்கு நீச்சல் தெரியாது. சிறிது நேரத்தில் மேகராஜ் நீரில் மூழ்கினார். உறவினர்கள் மேகராஜ் நீரில் மூழ்கியதை கண்டு கூச்சலிட்டனர்.

உடனடியாக இதுகுறித்து கொடுமுடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நீரில் மூழ்கிய மேகராஜை தேடினர். பின்னர் சிறிது நேரத்தில் மேகராஜை தண்ணீரில் இருந்து மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

இதையடுத்து அவரை கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர் மேகராஜ் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு காவிரி ஆற்றில் மூழ்கி 3 வாலிபர்கள் இறந்தது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com