ஈரோட்டில் சாலை விபத்தில் கல்லூரி மாணவர் பலி

பின்னால் வந்த தனியார் பள்ளி பஸ்சுக்காக ரோஷன் வழி விட ஒதுங்கினார். மோட்டார் சைக்கிளில் சென்ற ரோஷன் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.
ஈரோட்டில் சாலை விபத்தில் கல்லூரி மாணவர் பலி
Published on

ஈரோடு:

ஈரோடு மணல்மேடு பகுதியை சேர்ந்தவர் இருதயராஜ். இவரது மகன் ரோஷன் பிஜி (வயசு 19). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம். சி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை ரோஷன் பிஜி மோட்டார் சைக்கிளில் தனது நண்பரை ஈரோடு காளைமாட்டு சிலை அருகே இறக்கி விட்டு மீண்டும் மணல் மேட்டில் உள்ள தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

ஈரோடு சென்னிமலை ரோடு, பழைய கூட் செட் அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த தனியார் பள்ளி பஸ்சுக்காக ரோஷன் வழி விட ஒதுங்கினார். அந்த பகுதியில் புதிதாக ரோடு போடுவதற்காக சாலையை தோண்டி வைத்துள்ளனர்.

இதனால் மோட்டார் சைக்கிளில் சென்ற ரோஷன் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக பஸ்சின் பின் சக்கரம் ரோஷன் தலையில் ஏறி இறங்கியது. இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிய ரோசனை ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். எனினும் சிகிச்சை பலனின்றி ரோஷன் பிஜி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த மாணவனின் உடலை பார்த்து அவரது பெற்றோர் அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com