

சென்னை:
சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை ஆகிய இடங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த இடங்களுக்கு தற்போது பயணிகள் பலர் சென்று வருகிறார்கள்.
சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை ஆகிய இடங்களுக்கு செல்ல வழக்கமாக ரூ.4,500 கட்டணம் ஆகும். அதேபோல திருச்சிக்கு ரூ.3,700-ம், கோவைக்கு ரூ.3,900-மும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இந்த நிலையில் மத்திய அரசுக்கு எதிராக தொழிற்சங்கத்தினர் நடத்திய போராட்டம் காரணமாக சென்னையில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு விமான டிக்கெட் விலை கடுமையாக உயர்ந்தது.
பொது வேலைநிறுத்தம் காரணமாக நேற்று சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு பஸ் போக்குவரத்து முடங்கியது. மேலும் தொழிற்சங்கத்தினர் ஆங்காங்கே சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக சாலை வழியாக பயணம் செய்வது பாதுகாப்பானது அல்ல என்று கருதிய பயணிகள் நேற்று விமானம் மூலம் வெளிமாவட்டங்களுக்கு சென்றனர். இதனால் நேற்று விமான நிலையத்துக்கு பயணிகள் வருகை தொடர்ந்து அதிகரித்தது.
இதன் காரணமாக விமான டிக்கெட்டின் விலையும் கடுமையாக அதிகரித்தது. குறிப்பாக சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்ல விமான கட்டணம் ரூ.10 ஆயிரத்தை நெருங்கியது. வழக்கமாக தூத்துக்குடி செல்ல ரூ.4,500 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் அதை 2 மடங்குக்கு மேல் அதிகரித்து ரூ.9,662 ஆக உயர்ந்தது.
இதேபோல் மதுரைக்கு ரூ.8,262 ஆகவும், திருச்சிக்கு ரூ.5,042 ஆகவும், கோவைக்கு ரூ.4,617 ஆகவும், கட்டணம் உயர்ந்தது. இதனால் விமானத்தில் சென்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுதொடர்பாக விமான நிறுவனங்கள் கூறுகையில், ‘விமான கட்டணம் பல அடுக்குமுறையில் உள்ளது. குறைந்த கட்டண விமான டிக்கெட்கள் ஏற்கனவே விற்பனையாகிவிட்டன.
கடைசி நேரத்தில் பயணம் செய்ய வருபவர்களுக்கு அதிகபட்ச கட்டண டிக்கெட்டுகளே உள்ளன. இது வழக்கமானது தான். பஸ் போக்குவரத்து பாதிப்புக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை’ என்றார்.
இதுபற்றி பயணிகள் கூறுகையில், ‘வழக்கமாக பண்டிகை காலங்களில் மற்றும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கட்டணம் சற்று உயர்த்தப்படும். ஆனால் வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை விமான கட்டண உயர்வு தொழிற்சங்க வேலைநிறுத்தம் காரணமாக ஏற்பட்டதாகவே கருதுகிறோம்’ என்றனர்.