

உளுந்தூர்பேட்டை:
சென்னை முடிச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி (வயது 53). இவர் தனது குடும்பத்துடன் மதுரையில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் கலந்து கொண்டு மீண்டும் தனியார் பஸ்சில் சென்னைக்கு திரும்பினார். உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாதூர் காந்தி நகர் பகுதியில் உள்ள டீக்கடையில் அனைவரும் டீ குடிப்பதற்காக பஸ் நிறுத்தப்பட்டது.
அப்போது பழனிச்சாமி சிறுநீர் கழிப்பதற்காக சாலையை கடந்துள்ளார். அப்போது சங்கரன்கோவிலில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் பழனிச்சாமி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பழனிச்சாமி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த திருநாவலூர் போலீசார் பழனிச்சாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.