

நெல்லை:
நெல்லை மாவட்டம் முக்கூடல் அண்ணா நகரை சேர்ந்தவர் முருகன்(வயது 42). இவருக்கு அன்னதாய் என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
இதில் மூத்த மகளுக்கு திருமணமாகி விட்டது. 2-வது மகள் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். முருகன் மதுரையில் கேட்டரிங் தொழில் செய்து வந்தார்.
மேலும் பணம் கொடுக்கல்-வாங்கல், லோன் ஏற்பாடு செய்து கொடுப்பது போன்ற தொழிலும் செய்து வந்துள்ளார். இதற்காக மதுரை மாவட்டம் வேடையர் புளியங்குளத்தில் உள்ள அங்கயற்கண்ணி நகரில் முருகன் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே வாழ்க்கையில் வெறுப்படைந்த நிலையில் முருகன் காணப்பட்டுள்ளார். இதனால் தனது மனைவி மற்றும் மகளை முக்கூடலுக்கு அனுப்பி வைத்துவிட்டார்.
கடந்த 3 மாதங்களாக மதுரை மற்றும் நெல்லையில் உள்ள ஓட்டல்களில் தங்கி வந்துள்ளார். கடந்த 21-ந்தேதி நெல்லை தெற்கு பைபாஸ் சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கி உள்ளார்.
அப்போது வீடியோ ஒன்றை தனது செல்போனில் பதிவு செய்து, அதனை தனது மனைவி மற்றும் நண்பர்களுக்கு அனுப்பிவிட்டு முருகன் அந்த ஓட்டலில் வைத்து பூச்சி மருந்து குடித்து மயங்கினார்.
தகவல் அறிந்த மேலப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகனை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இதற்கிடையே அவரது மனைவிக்கு வாட்ஸ்-அப்பில் அனுப்பிய வீடியோவில், தன்னிடம் இருந்து ரூ.40 லட்சம் வரை மதுரை திருமங்கலத்தை சேர்ந்த ஒரு பெண் வாங்கி கொண்டதாகவும், அந்த பெண்ணுடன் சேர்ந்து சிலர் தன்னை மிரட்டி, கடனாளியாக ஆக்கிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தனது மகளின் பிரசவத்திற்கு பணம் தருவதாக கூறி அந்த பெண் ஏமாற்றிவிட்டதாகவும், இதனால் மனமுடைந்து தற்கொலை செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோவை அன்னதாய், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காண்பித்து புகார் அளித்துள்ளார். தனது கணவரை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். அதுவரை அவரது உடலை வாங்க மாட்டோம் என்றும் அவரும், உறவினர்களும் கூறி உள்ளனர்.
இதனால் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட முருகனின் உடல் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.