ஈரோட்டில் விபத்து: கணவன்-மனைவி உடல் நசுங்கி பலி

செட்டிபாளையம் பிரிவு என்ற பகுதியில் சென்ற போது திடீரென மொபட்டில் இருந்து நிலை தடுமாறி தம்பதியினர் ரோட்டில் கீழே விழுந்தனர்.அந்த வழியாக வந்த ஒரு கிரேன் வாகனம் கண் இமைக்கும் நேரத்தில் தம்பதி மீது ஏறி இறங்கியது.
ஈரோட்டில் விபத்து: கணவன்-மனைவி உடல் நசுங்கி பலி
Published on

ஈரோடு:

ஈரோடு மூலப்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (75). ஓய்வுபெற்ற வன ஊழியர். இவரது மனைவி பாப்பாத்தி (65). இவர்கள் 2 பேரும் இன்று காலை 9 மணி அளவில் நாதகவுண்டம்பாளையத்திற்கு உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு மொபட்டில் புறப்பட்டனர்.

அவர்கள் செட்டிபாளையம் பிரிவு என்ற பகுதியில் சென்ற போது திடீரென மொபட்டில் இருந்து நிலை தடுமாறி ரோட்டில் கீழே விழுந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு கிரேன் வாகனம் கண் இமைக்கும் நேரத்தில் அவர்கள் மீது ஏறி இறங்கியது. இதில் சுப்பிரமணி அவரது மனைவி பாப்பாத்தி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் பலியானார்கள். இந்த விபத்தை பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் 2 பேர் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

பின்னர் கிரேன் எந்திரத்தில் சிக்கி இருந்த மொபட்டை மீட்டனர். இது குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து கிரேன் வாகனத்தை ஓட்டி வந்தவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் வயதான தம்பதிகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com