

திருப்பூர்:
மத்திய அரசு ஊழியர்களுக்கான 18 மாத அகவிலைப்படி நிலுவையை உடனே வழங்க வேண்டும். மத்திய அரசு அலுவலகங்களில் 8.75 லட்சம் காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும். பொதுத் துறை வங்கிகளை தனியார் மயமாக்கக்கூடாது என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர் மாவட்ட மத்திய அரசு ஊழியர்களும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
அதன்படி மாவட்டத்தில் உள்ள வங்கிகள், எல்.ஐ.சி., தபால் நிலையம் உள்ளிட்ட மத்திய அரசை சார்ந்த நிறுவனங்கள் இயங்க வில்லை. இன்று 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 347 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் உள்ளன. இங்கு சுமார் 1700க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். வேலைநிறுத்தம் காரணமாக ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. ஒரு சில வங்கிகள் மட்டும் செயல்பட்டன. பெரும்பாலான வங்கிகள் செயல்படாததால் பண பரிவர்த்தனை கடுமையாக பாதிக்கப்பட்டது.
பொதுமக்கள் அவசர தேவைக்காக பணத்தை அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டது. திருப்பூரில் ஏராளமான பனியன் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்கள் அனைத்தும் வங்கிகள் மூலம் தினமும் கோடிக்கணக்கில் பண பரிவர்த்தனையில் ஈடுபடுகின்றன. ஸ்டிரைக் காரணமாக பெரும்பாலான நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் பணபரிவர்த்தனையில் ஈடுபட்டன. இன்று 2-வது நாளாக வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்கால் மாவட்டம் முழுவதும் மொத்தம் ரூ.1500 கோடி பணபரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.
ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரப்பப்படாததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இதேப்போல் மாவட்டத்தில் எல்.ஐ.சி., தபால் நிலையங்களில் ஊழியர்கள் பணிக்கு வராததால் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டன.