

திருச்சி:
திருச்சி நவல்பட்டு அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 53). ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற இவர் தற்போது துவாக்குடியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் பணியாற்றி வருகிறார்.
இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்னையில் உள்ள உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சிக்கு புறப்பட்டுச் சென்றார். அடுத்த நாள் அவர்கள் ஊர் திருப்பினர். பின்னர் வீட்டிற்கு சென்ற போது முன்பக்க கதவு பூட்டு போட்டு உடைக்கப்பட்டு கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அதன் பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த மூன்றரைப் பவுன் நகை, ரூ.2000 ரொக்க பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து செந்தில் குமார் நவல்பட்டு போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் கைரேகை நிபுணர்கள், மோப்பநாய் உடன் வருகை தந்து சோதனை நடத்தினர். இதில் இருவரின் கைரேகைகள் பதிவாகி உள்ளது. மேலும் விசாரணை நடந்து வருகிறது.