மொடக்குறிச்சி அருகே பிறந்து 5 நாட்களே ஆன பெண் குழந்தை 'திடீர்' மரணம்

பிறந்து 5 நாட்களே ஆன பெண் குழந்தை பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மொடக்குறிச்சி அருகே பிறந்து 5 நாட்களே ஆன பெண் குழந்தை 'திடீர்' மரணம்
Published on

ஈரோடு:

ஈரோடு வெண்டிபாளையம் சீனிவாசராவ் வீதியை சேர்ந்தவர் திருமூர்த்தி (30). இவரது மனைவி ராஜேஸ்வரி (25). கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் மீண்டும் கர்ப்பமான ராஜேஸ்வரிக்கு கடந்த 21-ந்தேதி அதிகாலையில் வீட்டிலேயே பெண் குழந்தை பிறந்தது. ராஜேஸ்வரிக்கு வலிப்பு நோய் உள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து குழந்தை பிறந்த பின் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்ற ராஜேஸ்வரி, கடந்த 24-ந்தேதி சிகிச்சை முடிந்து குழந்தையுடன் வீட்டுக்கு வந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு 8 மணியளவில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தபோது குழந்தையின் மூக்கிலும், வாயிலும் தாய்ப்பால் வெளியே வந்து மூச்சுவிட சிரமப்பட்டுள்ளது. இதையடுத்து சோலாரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

அங்கு மருத்துவரின் பரிந்துரையின்படி குழந்தைகள் நல மருத்துவரிடம் சிகிச்சை பெறுவதற்காக மீண்டும் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தார்.

பிறந்து 5 நாட்களே ஆன பெண் குழந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com