சாலையோரம் அமர்ந்து பேசிய 4 பெண்கள் மீது ஆட்டோ மோதல்- ஒருவர் பலி

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே சாலையோரம் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த 4 பெண்கள் மீது ஆட்டோ மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்து
விபத்து
Published on

பணகுடி:

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள சீலாத்திகுளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சுடலை. இவரது மனைவி பிரேமா(வயது 48).

இவர் நேற்று இரவு வீட்டு வேலைகளை முடித்துவிட்டு காற்று வாங்குவதற்காக வெளியே வந்தார். அப்போது அதே தெருவில் வசித்து வரும் கல்யாணி, காளீஸ்வரி, ஜோதி ஆகிய 3 பெண்களும் சாலையோரத்தில் நின்று பேசிக்கொண்டிருந்தனர்.

உடனே பிரேமாவும் அங்கு சென்றார். பின்னர் 4 பேரும் முடவன்குளம்-சீலாத்திகுளம் ரோட்டின் ஓரத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அந்த வழியாக ராதாபுரம் அருகே உள்ள மகேந்திரபுரத்தை சேர்ந்த குமார் என்பவர் லோடு ஆட்டோ ஓட்டி வந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக ஆட்டோ, சாலையோரத்தில் அமர்ந்திருந்த பிரேமா உள்பட 4 பெண்கள் மீதும் மோதியது. இதில் பிரேமா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.

தகவல் அறிந்து அங்கு வந்த ராதாபுரம் போலீசார் 3 பேரையும் மீட்டு நாகர்கோவில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். உயிரிழந்த பிரேமா உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து டிரைவர் குமாரிடம் விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com