ஆட்டோ மீது வேன் மோதல்: சென்னை தம்பதி உள்பட 3 பேர் பலி

தேவதானப்பட்டி காட்ரோடு பகுதியில் இருந்து தங்கள் இருப்பிடத்திற்கு செல்ல பஸ் வசதி இல்லாததால் ஒரு ஆட்டோவில் சென்றனர். ஆட்டோவை கெங்குவார்பட்டி அக்ரஹார தெருவை சேர்ந்த அருண்குமார் என்பவர் ஓட்டிச்சென்றார்.
ஆட்டோ மீது வேன் மோதல்: சென்னை தம்பதி உள்பட 3 பேர் பலி
Published on

தேவதானப்பட்டி:

சென்னை மயிலாப்பூர் பரமேஸ்வரி நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் கமலக்கண்ணன்(69). இவரது மனைவி சந்திரிகா(65). இவர்களுக்கு சொந்தமான வீடு கொடைக்கானல் அருகில் உள்ள பாரிகார்டன் என்ற பகுதியில் உள்ளது.

தீபாவளி பண்டிகையை இங்கு கொண்டாடுவதற்காக நேற்று இரவு கணவன்-மனைவி இருவரும் பஸ்சில் வந்தனர். தேவதானப்பட்டி காட்ரோடு பகுதியில் இருந்து தங்கள் இருப்பிடத்திற்கு செல்ல பஸ் வசதி இல்லாததால் ஒரு ஆட்டோவில் சென்றனர். ஆட்டோவை கெங்குவார்பட்டி அக்ரஹார தெருவை சேர்ந்த அருண்குமார்(35) என்பவர் ஓட்டிச்சென்றார்.

இரவு 12.30 மணியளவில் ஆட்டோ காட்ரோடு சாலையில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த வாகனம் ஆட்டோ மீது மோதியது. இதில நிலை குலைந்து ஆட்டோவை அருண்குமார் நிறுத்த முயன்றார். அப்போது எதிர்திசையில் பண்ணைக்காட்டில் இருந்த காய்கறிகளை ஏற்றிக்கொண்டு மதுரைக்கு வந்த வேன் பயங்கரமாக ஆட்டோ மீது மோதியது.

இந்த விபத்தில் ஆட்டோ கவிழ்ந்தது. இடிபாடுகளுக்குள் சிக்கி கமலக்கண்ணன் மற்றும் அவரது மனைவி சந்திரிகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்த ஆட்டோ டிரைவரை தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் அவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து உயிரிழந்த தம்பதியின் உடலையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய வேன் டிரைவரான கொடைக்கானலை சேர்ந்த பாலமுருகன்(21) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கொடைக்கானல் அருகில் உள்ள பாரிகார்டன் பகுதியில் பெரும்பாலானோர் வில்லா என்ற குடியிருப்பை அமைத்துள்ளனர். இங்கு வயது முதிர்ந்த தம்பதியினர் மட்டுமே வசித்து வருகின்றனர். பணியில் இருந்து ஓய்வுபெற்ற பலர் அமைதியான வாழ்க்கையை வாழ விரும்பி இதுபோன்ற இடங்களை தேர்வு செய்து இல்லங்களை அமைத்துள்ளனர். பெரும்பாலும் தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் நாடு முழுவதும் கேட்கும் பட்டாசு, வெடிச்சத்தம் இப்பகுதியில் இருக்காது. இதனால் சென்னையில் இருந்து பட்டாசு, வெடி சத்தத்தில் இருந்து விடுபட்டு அமைதியாக தீபாவளி பண்டிகையை கொண்டாட வந்தபோது விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். அவர்கள் தீபாவளி பண்டிகைக்காக கொண்டு வந்த புத்தாடைகள் மற்றும் பலகாரங்களும் சிதறி கிடந்தன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com