அரியலூரில் வீட்டில் இருந்து அலுவலகத்திற்கு நடந்து வந்த கலெக்டர்

அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி அவர் தங்கியுள்ள மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலகத்தில் இருந்து கலெக்டர் அலுவலகத்திற்கு நடந்து வந்தார்.
அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி
அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி
Published on

அரியலூர்:

காற்று மாசு, சுகாதாரத்திற்கு பெரும் சுற்றுச்சூழல் ஆபத்தாக வாகனங்களில் இருந்து வெளியேறும் கார்பன் மோனாக்சைடு உள்ளிட்டவை விளங்குவதோடு, மனித சுகாதாரத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கிறது. இதில் கார்பன்டை ஆக்சைடு ஆபத்தான வாயுவை வெளியேற்றி பூமியை மாசுபடுத்தி பருவநிலை மாற்றத்தை உண்டாக்குகிறது. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மாசை கட்டுப்படுத்த பல்வேறு பசுமை முயற்சிகளை முன்னெடுத்துள்ளது. இதன்படி மாசற்ற அலுவலக வாரம் கடைபிடித்தலின் ஒருபகுதியாக வாரத்தில் ஒருநாள் மோட்டார் வாகனங்களை பயன்படுத்துவதை அலுவலர்கள் தவிர்க்க அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் தலைமைச் செயலாளர் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய வழியுறுத்தலின்படி மாசற்ற அலுவலக வாரம் கடைபிடித்தலின் ஒரு பகுதியாக அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி நேற்று அவர் தங்கியுள்ள மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலகத்தில் இருந்து கலெக்டர் அலுவலகத்திற்கு நடந்து வந்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், வாரத்தில் புதன்கிழமை கள ஆய்வு பணிகள் மேற்கொள்வதன் காரணமாக வாகன பயன்பாட்டினை தவிர்க்க இயலாத சூழ்நிலையில் திங்கட்கிழமையன்று முழுவதும் அலுவலக பணி என்பதால் வாகனம் தவிர்க்கப்படும். இது தொடர்பாக அரசு அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு இதை நடைமுறைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே வெளியிடங்களில் இருந்து வரக்கூடிய அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள், வாரத்தில் ஒரு நாள் பொது போக்குவரத்து வாகனங்களையோ அல்லது சைக்கிளை பயன்படுத்தியோ, அலுவலகங்களின் அருகே உள்ளவர்கள் நடைபயணமாகவோ அலுவலகங்களுக்கு செல்ல கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதன் மூலம் காற்று மாசு, போக்குவரத்து நெருக்கடி குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com