2-வது நாளாக இன்று வேலை நிறுத்தம்- ஈரோடு மாவட்டத்தில் அனைத்து பஸ்களும் வழக்கம்போல் ஓடியது

ஈரோடு மாவட்டத்தில் 11 பணிமனைகளில் இருந்து தினமும் 700-க்கும் மேற்பட்ட பஸ்கள் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டு வந்த நிலையில் நேற்றைய வேலை நிறுத்த போராட்டத்தில் 90 சதவீத பஸ்கள் இயக்கப்படவில்லை.
ஈரோடு பஸ் நிலையத்தில் இன்று காலை வழக்கம்போல் பஸ்கள் ஓடியது.
ஈரோடு பஸ் நிலையத்தில் இன்று காலை வழக்கம்போல் பஸ்கள் ஓடியது.
Published on

ஈரோடு:

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது. அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை கைவிட வேண்டும்.

மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் உள்பட 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அகில இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் அகில இந்திய அளவில் 2 நாள் வேலை நிறுத்தம் நேற்று தொடங்கியது.

இந்த போராட்டத்திற்கு அகில இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏ.ஐ.டி.யூ.சி, சி.ஐ.டி.யு, ஐ.என்.டி.யூ.சி, எல்.பி. எப்.எம்.எல்.எப், எல்.டி.யு.சி, உள்ளிட்ட 10 தொழிற் சங்கங்கள் ஆதரவு தெரிவித்திருந்தன.

இதனால் முதல் நாளான நேற்று பஸ் போக்குவரத்து, வங்கி சேவைகள், தபால் சேவைகள் முடங்கியது. குறிப்பாக பஸ் போக்குவரத்து ஊழியர்கள் பெரும்பாலானோர் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் பஸ் போக்குவரத்து கடுமையாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பஸ் சேவை முடங்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் 11 பணிமனைகளில் இருந்து தினமும் 700-க்கும் மேற்பட்ட பஸ்கள் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டு வந்த நிலையில் நேற்றைய வேலை நிறுத்த போராட்டத்தில் 90 சதவீத பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் மாணவ- மாணவிகள், வியாபாரிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

அதேநேரம் தனியார் பஸ்கள் வழக்கம்போல் இயங்கியதால் அதில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை அனைத்து தொழிற்சங்கத்தினர் கூடிப் பேசி முடிவெடுத்து நாளை 2-வது நாளாக நடைபெறும் வேலை நிறுத்த போராட்டத்தில் கூடுதலாக பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தனர்.

அதன்படி இன்று 2-வது நாளாக பொது வேலை நிறுத்தம் தொடங்கியது. இருந்தாலும் ஈரோடு மாவட்டத்தில் இன்று வழக்கம் போல் அனைத்து அரசு பஸ்களும் இயங்கியது. மாநகர பஸ்கள், புறநகர் பஸ்கள், வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியது.

இன்று காலை 9 மணி நேர நிலவரப்படி 93 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மதியத்திற்குள் அனைத்து பஸ்களும் அதாவது 100 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டதால் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

இந்நிலையில் 2-வது நாளாக அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதுபோல் கோபி,சத்தியமங்கலம், பெருந்துறை, பவானி போன்ற இடங்களிலும் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com