

ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை அருகே உள்ள மெய்யூர் கிராம எல்லையில் கொசஸ்தலை ஆறு பாய்கிறது. சென்னை நகர மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி ஏரி முழுவதுமாக நிரம்பினால் உபரி நீர் மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்படுவது வழக்கம்.
இப்படி திறந்து விடப்படும் உபரிநீர் மெய்யூர் வழியாக பாய்ந்து பழவேற்காடு பகுதியில் கடலில் கலக்கிறது.
பூண்டி ஏரி முழுவதுமாக நிரம்பி தண்ணீர் திறந்துவிட போதெல்லாம் மெய்யூரில் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 30 கிராம பொது மக்கள் ஆற்றை கடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.
இதனை கருத்தில் கொண்டு சுமார் 30 வருடங்களுக்கு முன் மெய்யூர் கொசஸ்தலை ஆற்றில் தரைப்பாலம் அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் பலத்த மழை பெய்ததால் பூண்டி ஏரி முழுவதுமாக நிரம்பி உபரிநீர் மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது. அதிகபட்சமாக வினாடிக்கு 40 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் மெய்யூரில் உள்ள தரைப் பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
இதனால் தரப்பாலத்தைக் கடக்க முடியாமல் 30 கிராம பொதுமக்கள் மாற்று வழியில் திருவள்ளூர், ஊத்துக்கோட்டை மற்றும் ஏனைய பகுதிகளுக்கு கூடுதல் பஸ் கட்டணம் செலுத்தி சென்று வருகின்றனர்.
பூண்டி ஏரியில் இருந்து உபரி நீர் திறந்து விடும் போதெல்லாம் இதுபோன்ற நிலை தொடர்வதால் மெய்யூரில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று 30 கிராம பொது மக்கள் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம், மற்றும் ஊத்துக்கோட்டை தாலுக்கா அலுவலகத்தில் பல கோரிக்கை மனுக்கள் அளித்தும் அதிகாரிகள் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப் படுகிறது.
இதனை கண்டித்து இன்று மெய்யூர் தரைப்பாலம் தொகுதியில் தர்ணா போராட்டம் நடத்த பொது மக்கள் முடிவு செய்தனர். இதனையடுத்து ஊத்துக்கோட்டை தாசில்தார் ரமேஷ், துணை போலீஸ் கண்காணிப்பாளர் சாரதி ஆகியோர் 30 கிராம பொது மக்களின் பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
போர்க்கால அடிப்படையில் மெய்யூர் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே விரைவில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.
இதனை ஏற்று கிராம மக்கள் இன்று நடைபெறு வதாக அறிவித்த தர்ணா போராட்டத்தை கைவிட்டு உள்ளனர்.