பெரம்பூர் பள்ளியில் 5-ம் வகுப்பு மாணவியிடம் சில்மி‌ஷம் செய்த தூய்மை பணியாளர்

பெரம்பூர் பள்ளியில் 5-ம் வகுப்பு மாணவியிடம் வக்கிர புத்தியுடன் நடந்து கொண்ட தூய்மை பணியாளரின் சம்பவம் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை
Published on

சென்னை:

பெரம்பூர் பகுதியை சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க பெண் பெரவள்ளூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார்.

அதில் தனது 9 வயது மகள் பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறாள். பள்ளியில் நடந்த ஆண்டு விழாவில் பங்கேற்றாள். நிகழ்ச்சி முடிந்து எனது மகளை அழைத்து வர நான் பள்ளிக்கு சென்றபோது மகள் அழுதுகொண்டே வந்தாள்.

இதுகுறித்து அவளிடம் விசாரித்தபோது, அதே பள்ளியில் தூய்மை பணியாளராக வேலை செய்பவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்தார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.

அதன் பேரில் பெரவள்ளூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பிகா சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார். அதில் பள்ளியில் தூய்மை பணியாளராக பணிபுரியும் சாமுவேல் (68), சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றதும் சிறுமி அவரிடம் இருந்து தப்பித்து ஓடியதும் தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து சாமுவேல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டார். 5-ம் வகுப்பு மாணவியிடம் வக்கிர புத்தியுடன் நடந்து கொண்ட தூய்மை பணியாளரின் சம்பவம் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com