கொரோனா காலத்தில் பணியாற்றியவர்கள் வேலைநீக்கம்- மெரினாவில் 800 நர்சுகள் ‘திடீர்’ போராட்டம்

மெரினாவில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் நர்சுகள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டது போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
நர்சுகள் போராட்டம்
நர்சுகள் போராட்டம்
Published on

சென்னை:

கொரோனா காலத்தில் பணிபுரிவதற்காக கடந்த 2020-ம் ஆண்டு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நர்சுகளை அரசு தற்காலிகமாக பணி அமர்த்தியது. மொத்தம் 3,200 பேர் அரசு மருத்துவமனைகளில் நர்சுகளாக பணியமர்த்தப்பட்டனர். இவர்களுக்கு ரூ.14 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டது.

கொரோனா காலத்தில் இந்த நர்சுகள் அனைவரும் தங்களை முழுமையாக பணியில் ஈடுபடுத்திக் கொண்டனர்.

இவர்களில் 2,400 பேர் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீதம் உள்ள 800 நர்சுகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனை கண்டித்து 800 நர்சுகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

டி.எம்.எஸ். அலுவலகத்தை முற்றுகையிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட நர்சுகள் தங்களையும் மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ளுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் 800 நர்சுகளும் இன்று காலை மெரினாவில் ஒன்றாக திரண்டனர். இவர்களில் பலர் சீருடையுடன் வந்திருந்தனர். அனைவரும் அண்ணா-கருணாநிதி நினைவிடம் அருகே சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மெரினா கடற்கரையில் நர்சுகள் நடத்திய இந்த திடீர் போராட்டம் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது. திருவல்லிக்கேணி உதவி கமி‌ஷனர் பாஸ்கர் மற்றும் போலீசார் விரைந்து சென்று நர்சுகளிடம் சமாதான பேச்சு நடத்தினர். அப்போது அவர்கள் கொரோனா காலத்தில் எங்களிடம் வேலை வாங்கி விட்டு இப்போது வீட்டுக்கு போக சொன்னால் எப்படி? என்று கேள்வி எழுப்பினர்.

கொரோனா காலத்தில் மாஸ்க், கையுறை அணிந்து மிகுந்த சிரமத்தோடு தாங்கள் பணியாற்றி உள்ளோம். எங்கள் கைகளை பாருங்கள் என்றும் நர்சுகள் பலர் போலீசாரிடம் கைகளை காட்டினர்.

தொடர்ந்து கையுறை அணிந்ததால் தங்கள் கைகள் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் நர்சுகள் வேதனைப்பட்டனர். இப்படி தங்களது பிரச்சினைகளை கூறிய நர்சுகள் கோ‌ஷம் எழுப்பிய படியே கருணாநிதி சமாதிக்கு செல்லும் வழியில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து போலீசார் நர்சுகளை கைது செய்து போலீஸ் வேனில் அழைத்துச் சென்றனர். அனைவரும் அருகில் உள்ள சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட நர்சுகள் கூறும்போது, “முதல்-அமைச்சர் எங்கள் பிரச்சினையில் தலையிட்டு எங்களுக்கு மீண்டும் வேலை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தனர்.

மெரினாவில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் நர்சுகள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டது போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com