

அம்பத்தூர்:
வில்லிவாக்கம், பாரதி நகரை சேர்ந்தவர் ரஞ்சித் என்கிற டபுள் ரஞ்சித் (வயது22). ரவுடி. இவர் மீது, செங்குன்றம், சோழவரம், வில்லிவாக்கம், ஐ.சி.எப். போலீஸ் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
எதிர்தரப்பினரால் ஆபத்து இருப்பதை உணர்ந்த ரஞ்சித் செங்குன்றத்தில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை ரஞ்சித், தனது நண்பரான சதீசுடன் வில்லிவாக்கம், நியூ ஆவடி சாலை, ஆடுதொட்டி அருகே நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் ரஞ்சித் மற்றும் சதீசை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே ரஞ்சித் பலியானார். சதீசுக்கு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து உதவி கமிஷனர் சகாதேவன் தலைமையில் வில்லிவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் ரஞ்சித்தை தீர்த்து கட்டியது வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த ஜெயகாந்தன், காட்டான் கார்த்தி, ஆவடி தினேஷ் குமார், கோயம்பேடு பத்மநாபன், முகப்பேர் மணிகண்டன், புழல் லட்சுமிபுரத்தை சேர்ந்த விமல் ஆகியோர் என்பது தெரிந்தது. அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் நண்பரின் கொலைக்கு பழிக்கு பழியாக ரஞ்சித்தை கொலை செய்ததாக அவர்கள் தெரிவித்து உள்ளனர்.
வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த அலெக்ஸ் என்பவர் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ரஞ்சித் முக்கிய குற்றவாளி ஆவார்.
அலெக்ஸ் கொலைக்கு பழி தீர்க்க அவரது கூட்டாளிகளான ஜெயகாந்தன் உள்பட 6 பேரும் ரஞ்சித்தை திட்டமிட்டு தீர்த்து கட்டி உள்ளனர்.
நேற்று மாலை ரஞ்சித் தனது நண்பருடன் வில்லிவாக்கம் பகுதிக்கு வந்திருப்பதை அறிந்த கும்பல் அவரிடம் சமாதானம் பேசுவது போல் அழைத்து தீர்த்து கட்டியது விசாரணையில் தெரியவந்தது.
ரஞ்சித் கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து கைதான 6 பேரிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.