

உடன்குடி:
உடன்குடி தேரியூர் பகுதியில் நேற்று இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமான முறையில் வந்த 2 லோடு ஆட்டோக்கள் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்களை மறித்து சோதனை செய்தனர். மோட்டார் சைக்கிள்களில் இருந்தவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர். இதனால் போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. உடனே அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் 2 லோடு ஆட்டோக்களையும் சோதனை செய்த போது 1,100 கிலோ எடை உள்ள புகையிலை இருந்தது.அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.6 லட்சம் ஆகும்.
இதைத் தொடர்ந்து ஆட்டோக்களில் இருந்தவர்கள் உள்பட மொத்தம் 6 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் நெல்லை மாவட்டம் பணகுடி பகுதியை சேர்ந்த ராஜா கனி (44), கோவில் விளையை சேர்ந்த லங்கா மணி, மணிகண்டன், லெப்பை குடியிருப்பை சேர்ந்த ஆல்பர்ட் ராஜன் மற்றும் உடன்குடி தேரியூரை சேர்ந்த சித்திரை செல்வன், அவரது தம்பி மோகன் ராஜ் ஆகியோர் என்பது தெரிய வந்தது.கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லோடு ஆட்டோக்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.