

சென்னை:
பங்குனி திருவிழாவையொட்டி மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், மண்ணடி மல்லிகேஸ்வரர் கோவில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில், திருமழிசை ஒத்தாண்டேஸ்வரர் ஆகிய கோவில்களில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா வருகிற 18-ந் தேதி வரை நடைபெறுகிறது.
முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். தேர் 4 ராஜவீதிகள் வழியாக வலம் வந்தது. விழாவையொட்டி தெருக்கள் முழுவதும் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது.
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. மயிலாப்பூர் லஸ் கார்னரில் இருந்து மந்தைவெளி சாலை வரை போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 1,500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட் டனர். கோவிலை சுற்றி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணித்தனர்.
நாளை 63 நாயன்மார்கள் திருவீதி உலா நடைபெறுகிறது. இதையொட்டியும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திருமழிசையில் உள்ள குளிர்ந்த நாயகி உடனுறை ஒத்தாண்டேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவையொட்டி தினமும் காலை, மாலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கடந்த 13-ந்தேதி அதிகார நந்தி சேவையும், ரிஷப வாகன உற்சவமும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.
உற்சவர் ஒத்தாண்டேஸ்வரர் திருத்தேரில் எழுந்தருளினார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
மாலை 5 மணியளவில் சுவாமி வசந்த மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், இரவு 10 மணிக்கு வசந்த மண்டபத்தில் இருந்து கோவிலுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
மண்ணடி, முத்தியால்பேட்டை லிங்கி செட்டி தெருவில் உள்ள மரகதாம்பாள் சமேத மல்லிகேஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
5-ம் நாள் நிகழ்ச்சியாக கடந்த 13-ந் தேதி 63 நாயன்மார்கள் திருவீதி உலா நடைபெற்றது. விழாவின் 7-ம் நாளான இன்று தேரோட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது.
லிங்கி செட்டி தெரு, தம்பு செட்டி தெரு, இப்ராகிம் தெரு வழியாக தேரோட்டம் நடைபெற்றது.
பின்னர் பிற்பகல் திருத்தேர் மீண்டும் கோவிலை வந்தடைந்தது. விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தேரோட்டத்தையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வருகிற 17-ந்தேதி இரவு புஷ்ப பல்லக்கு உற்சவம் நடக்கிறது. 18-ந்தேதி பகலில் தீர்த்தவாரி உற்சவமும், திருக்கல்யாண திருவிழாவும் நடக்கிறது.
திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் பங்குனி விழாவையொட்டி 7-ம் நாளான இன்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை இழுத்து சென்றனர். 16 கால் மண்டபம், பவனி மேடை, கிழக்கு மாடவீதி, மாங்கனி விநாயகர் கோவில், தெற்கு மாடவீதி, புத்திரானங்கண்ணியம்மன், மேட்டுத்தெரு வழியாக தேரோட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து கோவில் மேற்கு கோபுரம், பிள்ளையார் கோவில் தெரு சந்திப்பு, அண்ணா தெரு வழியாக மீண்டும் தேர் நிலையை வந்தடைந்தது. தேரோட்டத்தையொட்டி அனைத்து வீதிகளிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி காணப்பட்டது.
விழாவையொட்டி வருகிற 17-ந்தேதி கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம், வன்னிமரக்காட்சி நடைபெறுகிறது. 18-ந் தேதி திருவான்மியூர் குப்பம் கடற்கரையில் சந்திரசேகரர் கடல் நீராடலும், 19-ந்தேதி தெப்பத் திருவிழாவும் நடக்கிறது.