அன்னூரில் ஒரே நாளில் 4 குழந்தை திருமணங்கள் நிறுத்தம்- சமூக நலத்துறையினர் அதிரடி நடவடிக்கை

குழந்தை திருமண சட்டத்தின்படி 18 வயதுக்குள் பெண்ணுக்கும், 21 வயதுக்குள் ஆணுக்கும் திருமணம் செய்ய கூடாது.திருமணத்திற்கு உடந்தையாக இருக்கும் பூசாரி முதல் அனைத்து உறவினர்கள், பங்கேற்பவர்கள், திருமணத்திற்கு இடம் அளிப்பவர்கள் என அனைவரும் தண்டனைக்கு உரியவர்கள்.
அன்னூரில் ஒரே நாளில் 4 குழந்தை திருமணங்கள் நிறுத்தம்- சமூக நலத்துறையினர் அதிரடி நடவடிக்கை
Published on

அன்னூர்:

அன்னூர் வட்டாரத்தில் குழந்தை திருமணம் நடப்பதாக சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது.

இதையடுத்து அன்னூர் வட்டார சமூக நல பிரிவு அலுவலர் வள்ளி, கிராம சேவகர்கள் லட்சுமி, ராஜாமணி, சைல்டு லைன் நிர்வாகி கல்பனா ஆகியோர் புகார் வந்த காரே கவுண்டன்பாளையம், அச்சம்பாளையம், மசக்கவுண்டன் செட்டிபாளையம், செந்தாம்பாளையம், கஞ்சப்பள்ளி, அல்லிகுளம் என 4 இடங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது இந்த 4 கிராமங்களிலும் 14, 15, 16, 17 வயது குழந்தைகளுக்கு திருமணம் நடக்க இருப்பதை அறிந்தனர். உடனடியாக சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் நித்யா தலைமையிலான போலீசார் விரைந்து வந்து, குழந்தைகளின் பெற்றோரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். மேலும் அவர்களிடம் இதுபோன்று செய்யக்கூடாது என எச்சரித்தனர்.

மேலும் தங்கள் பெண் குழந்தைகளுக்கு 18 வயது முடியும் வரை திருமணம் செய்து வைக்க மாட்டோம் என உறுதி மொழி எழுதி வாங்கி விட்டு வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சமூக நலத்துறை அலுவலர்கள் கூறியதாவது:-

குழந்தை திருமண சட்டத்தின்படி 18 வயதுக்குள் பெண்ணுக்கும், 21 வயதுக்குள் ஆணுக்கும் திருமணம் செய்ய கூடாது. திருமணத்திற்கு உடந்தையாக இருக்கும் பூசாரி முதல் அனைத்து உறவினர்கள், பங்கேற்பவர்கள், திருமணத்திற்கு இடம் அளிப்பவர்கள் என அனைவரும் தண்டனைக்கு உரியவர்கள். மணமகன் மீது போக்சோ வழக்கும் பதிவு செய்யப்படும்.

தற்போது நடக்க இருந்த 4 திருமணங்களும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அவர்களது பெற்றோரை எச்சரித்து உரிய அறிவுரை வழங்கி வீட்டிற்கு அனுப்பி உள்ளோம். தொடர்ந்து அவர்களை கண்காணித்து வருகிறோம்.

18 வயது பூர்த்தியடையாத பெண் குழந்தைக்கு திருமணம் நடந்தால் அந்த பெண் தோழிகள், அண்டை வீட்டார் என யாராக இருந்தாலும் உடனடியாக 1098 என்ற எண்ணுக்கு 24 மணி நேரமும் தகவல் தெரிவிக்கலாம்.

தொலைபேசியில் தகவல் தெரிவிப்பவர்களின் பெயர், முகவரி ரகசியம் பாதுகாக்கப்படும். இத்துடன் 1091, 181 ஆகிய எண்களிலும் தகவல் தெரிவிக்கலம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com