

மகுடஞ்சாவடி:
சேலம் மாவட்டம், இளம்பிள்ளை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் விசைத்தறி மூலம் சேலை உற்பத்தி மற்றும் அதன் சார்பு தொழிலிலுக்காக புலம் பெயர்ந்த (வடமாநிலத்தவர்) தொழிலாளர்கள் அதிக அளவில் தொழில் புரிந்து வருகின்றனர்.
இவர்கள் அதிகமாக போதை பொருட்களை உபயோகித்து வருகின்றனர். இதனை அறிந்த ஒரு சில பெட்டிக்கடை வியாபாரிகள் இப்பகுதியில் குட்கா, பான்பராக் உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் அதிக அளவில் போதை பொருளை உபயோகப்படுத்தி வருவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தன.
இதனையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ் உத்தரவின் பெயரில் சங்ககிரி டி.எஸ்.பி. நல்லசிவம் மேற்பார்வையில் மகுடஞ்சாவடி இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு, பெரியசாமி மற்றும் போலீ சார் ஒரே நேரத்தில் அதிரடியாக பெருமாகவுண்டம்பட்டி, இளம்பிள்ளை, இடங்கணசாலை மோட்டூர் பகுதிகளில் சோதனையிட்டனர்.
அப்போது பெருமாகவுண்டம்பட்டி பகுதியில் ஜகுபர்அலி (வயது 50), இளம்பிள்ளை சவுண்டம்மன் கோவில் பகுதியில் யாசர்அராவத் (28), இளம்பிள்ளை, புதுரோடு பகுதியில் குமார் (35), இடங்கணசாலை மோட்டூர் பகுதியில் சீனிவாசன் (42) ஆகியோர் பெட்டிக்கடைகளில் இருந்த சுமார் ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர்.
மேலும் இவர்களின் பெட்டி கடைகளுக்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அவர்களுக்கு எங்கிருந்து போதைப் பொருட்களை சப்ளை செய்யப்படுகிறது என போலீசார் ரகசியமாக கண்காணித்து விசாரணை செய்து வருகின்றனர்.