

நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதையடுத்து மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. நாகர்கோவில் பறக்கிங்கால் பகுதியில் 392 வீடுகள் இடித்து அகற்றப்பட்டது. இதேபோல் பழையாறு மற்றும் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது.
தேரேகால் புதூர் பகுதியில் உள்ள புள்ளிகுளத்தையொட்டி ஆக்கிரமிப்பில் வீடுகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வீடுகளில் வசித்து வந்தவர்களுக்கு கடந்த மாதம் நோட்டீஸ் வழங்கினார்கள். வீடுகளை உடனடியாக காலி செய்ய அவர்கள் வலியுறுத்தினார்கள்.
ஆனால் பொதுமக்கள் வீடுகளை காலி செய்யவில்லை. இந்த நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வீடுகளை இடிப்பதற்காக நேற்று காலை பொக்லைன் எந்திரங்களுடன் வந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் நெல்லை நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். நாகர்கோவில் டிஎஸ்பி நவீன்குமார் இன்ஸ்பெக்டர்கள் திருமுருகன் முத்துராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அகஸ்தீஸ்வரம் தாசில்தார் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் அங்கு வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதைத் தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் வீடுகளை ஜேசிபி எந்திரம் மூலமாக இடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். வீடுகள் இடிக்கப்பட்டதையடுத்து வீட்டில் இருந்த பொருட்களை பொதுமக்கள் வாகனங்களில் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். வீட்டில் இருந்த பீரோ கட்டில் மெத்தை உள்ளிட்ட அனைத்து பொருட்களும் அகற்றப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் வீடுகளை இழந்து நடுரோட்டில் தவித்தனர்.
ஒரு சிலர் உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர். அதிலிருந்த இருபத்தி ஏழு வீடுகள் இடித்து அகற்றப்பட்டது. இதில் திருமண மண்டபம் ஒன்றும் அடங்கும். ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதையடுத்து அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. இதேபோல் தத்தையார்குளம் பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த 21 வீடுகளுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கி உள்ளனர். இதை தொடர்ந்து இன்று மதியத்திற்கு பிறகு அந்த வீடுகளை அளந்து இடித்து அகற்றவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.