

நாகர்கோவில்:
நாகர்கோவில் வடசேரி கனகமூலம் சந்தையில் மாநகராட்சிக்கு சொந்தமாக 270 கடைகள் உள்ளன. இதில் தற்போது 135 கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 41 கடைக்காரர்கள் வாடகை பாக்கியை செலுத்தாமல் இருந்து வந்தனர். அதாவது 4 முதல் 5 மாதங்கள் வரை வாடகை பாக்கி செலுத்த வேண்டி இருந்தது. அதாவது 41 கடைகளுக்கும் மொத்தம் 18 லட்சம் பாக்கி தொகை இருந்தது.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட கடைக்காரர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இருப்பினும் பல கடைக்காரர்கள் வாடகை பாக்கியை செலுத்தவில்லை. எனவே சம்பந்தப்பட்ட கடைகளுக்கு சீல் வைக்க மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர்.
அதன்படி மாநகராட்சி ஆணையர் உத்தரவின் பேரில் வருவாய் ஆய்வாளர்கள் சுப்பையா, ஞானப்பா மற்றும் முருகன் ஆகியோர் நேற்று வடசேரி கனகமூலம் சந்தைக்கு சென்று 41 கடைகளுக்கும் சீல் வைக்க நடவடிக்கை எடுத்தனர். இதற்காக போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.
ஆனால் அதிகாரிகள் சீல் வைக்க வந்தபோது சில கடைக்காரர்கள் தாங்களாகவே முன் வந்து வாடகை பாக்கியை செலுத்தினர். அந்த வகையில் 30 கடைக்காரர்கள் உடனடியாக வாடகை பாக்கியை செலுத்தினர். இதன் மூலம் ரூ.10 லட்சம் வசூலானது. இதைத் தொடர்ந்து மீதமுள்ள 11 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். சீல் வைப்பு நடவடிக்கையால் வடசேரி சந்தை பரபரப்பாக காணப்பட்டது.