

ராயபுரம்:
காசிமேடு பகுதியை சேர்ந்த மீனவர்கள் 11 பேர் டிரைவர் ராஜா தலைமையில் கடந்த 31-ந் தேதி விசைப்படகில் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.
கடந்த 26-ந் தேதி விசாகப்பட்டினம் துறைமுகம் அருகே 45 கடல் மைல் தொலைவில் ஆழ்கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது விசைப்படகில் என்ஜினில் திடீரென பழுது ஏற்பட்டது.
இதனால் விசைப்படகில் இருந்த 11 மீனவர்களும் கரைக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. அவர்கள் பழுதான படகில் நடுக்கடலில் தத்தளித்தனர்.
இது குறித்து மீனவர்கள் உடனடியாக மீனவர் சங்க நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக காசிமேடு மீன்வளத்துறை அதிகாரிகளுக்கும், கடலோர காவல் படையினருக்கும் மீனவர்களை மீட்கக்கோரி கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து நடுக்கடலில் சிக்கி தவிக்கும் மீனவர்களை மீட்க கடலோர காவல் படையினர் தேடுதலில் ஈடுபட்டனர்.
அப்போது விசாகப்பட்டினம் அருகே நடுக்கடலில் தத்தளித்த 11 காசிமேடு மீனவர்களையும் பத்திரமாக மீட்டனர். பின்னர் அவர்களை விசாகப்பட்டினம் துறைமுகத்துக்கு அழைத்து வந்தனர். பழுதான விசைப்படகும் கொண்டு வரப்பட்டது.
மீட்கப்பட்ட மீனவர்களின் விவரங்களை கடலோர காவல் படையினர் மற்றும் மீனவளத்துறை அதிகாரிகள் கேட்டறிந்தனர்.
இதன்பின்னர் அவர்கள் விரைவில் சென்னை திரும்ப உள்ளனர். பழுதடைந்த விசைப்படகை மீட்டு கொண்டு வர மீனவர்கள் முடிவு செய்து உள்ளனர்.
கடலில் தத்தளித்த மீனவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டதால் அவர்களது குடும்பத்தினர் நிம்மதி அடைந்து இருக்கிறார்கள்.