ராஜாக்கமங்கலத்தில் தொழில் அதிபர் வீட்டில் 100 பவுன் நகைகள் கொள்ளை

வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோவும் திறந்து கிடந்தது. அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன.கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா, சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினார்.
கொள்ளை நடந்த வீட்டில் விசாரணை நடந்த போது எடுத்தப்படம்.
கொள்ளை நடந்த வீட்டில் விசாரணை நடந்த போது எடுத்தப்படம்.
Published on

ராஜாக்கமங்கலம்:

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் போலீஸ் சரகத்திற்குட்பட்ட கணபதிபுரத்தை சேர்ந்தவர் பூதலிங்கம். இவரது மகன் முருகன் (வயது 43).

இவர் தனியார் நிதி நிறுவனம் வைத்துள்ளார். மேலும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில்களையும் நடத்தி வருகிறார். இதற்காக வீட்டோடு சேர்த்து அலுவலகமும் அமைத்துள்ளார்.

இந்த நிறுவனங்களை முருகன் மற்றும் அவரது மனைவி மேரி பெல்லா ஆகியோர் நிர்வகித்து வந்தனர். இவர்களுக்கு ஒரு மகனும் 2 மகள்களும் உள்ளனர். இதில் மகன் படிப்பு விஷயமாக அனைவரும் குடும்பத்துடன் சென்னை சென்றுள்ளனர். இதனால் வீடு பூட்டப்பட்டிருந்தது.

இன்று காலை முருகன் வீட்டிற்கு அவரது தந்தை பூதலிங்கம் வந்துள்ளார். அவர் வீட்டில் வளர்க்கப்படும் மீன்களுக்கு இரை போடுவதற்காக வந்துள்ளார். அப்போது அங்கு வீடு மற்றும் அலுவலகத்தின் கதவு பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோவும் திறந்து கிடந்தது. அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. எனவே வீட்டுக்குள் கொள்ளையர்கள் புகுந்திருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர். அவர்கள் கொள்ளை நடந்த வீடு மற்றும் அலுவலகத்தை பார்வையிட்டனர். தொடர்ந்து சென்னையில் இருக்கும் முருகனிடம் போனில் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது வீட்டில் 100 பவுனுக்கு மேல் நகைகள் வைத்திருந்ததாக தெரியவந்துள்ளது. எனவே அந்த நகைகள் கொள்ளை போய் இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் பணம் எதுவும் கொள்ளை போயிருக்கலாமா என்பதும் தெரியவில்லை. முருகன் வீட்டிற்கு வந்த பிறகு தான் கொள்ளை போன நகை-பணத்தின் முழு விவரமும் தெரியவரும்.

கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா, சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினார். கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். மேலும் மோப்பநாய் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாசிங் தலைமையில் மோப்பநாய் குட்சி வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

பூட்டப்பட்டு இருந்த வீட்டை உடைத்து கொள்ளை சம்பவம் நடந்தி ருப்பது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com