உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்கள்
உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்கள்

உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்கள் - சிறப்பு விமானம் மூலம் அழைத்துச் செல்ல கோரிக்கை

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 14 மாணவர்கள் உக்ரைன் நாட்டு மெட்ரோ ரெயில் நிலையத்தில் தஞ்சம் அடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Published on

கீவ்:


உக்ரைன் நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் ஏராளமான தமிழக மாணவர்கள் படித்து வருகின்றனர்.  தற்போது அங்கு போர் பதற்றம் காணப்படுவதால், அவர்கள் அச்சமடைந்துள்ளனர். 

உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை உடனடியாக இந்தியாவிற்கு அழைத்து வர விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 14 மாணவர்களும் மெட்ரோ ரெயில் நிலையம் ஒன்றின் சுரங்கப்பாதையில் தஞ்சம் அடைந்திருப்பதாக அவர்களது குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா அஞ்சுகோட்டை வாணியேந்தல் பகுதியை சேர்ந்த நவீன் என்ற  மருத்துவ மாணவர்,

செல்போன் மூலம் தனது குடும்பத்தினரிடம் பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது:

உக்ரைன் நாட்டில் நிலைமை மோசமாக உள்ளது. கீவ் நகரில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தூரத்தில் எனது நண்பர்களுடன் தங்கியிருந்தேன். 

நான் இருக்கும் பகுதியில் 450-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்தனர். நானும் எனது நண்பர்களும் 24-ந்தேதி காலையில் விமானத்தில் இந்தியா புறப்பட தயாராக இருந்த நிலையில் திடீரென சுமார் 5 கி.மீ. தூரத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. 

இதனால் நாங்கள் அங்குள்ள மெட்ரோ ரெயில் சுரங்க பாதையில் தஞ்சம் அடைந்துள்ளோம். இந்திய மாணவர்கள் நாடு திரும்ப மத்திய அரசு நடவடிக்கை எடுத்து சிறப்பு விமானங்களை ஏற்பாடு செய்து எங்களை காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com