

சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியத்திற்குட்பட்ட செட்டிமாங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் விவசாய கூலித் தொழிலாளி செங்கோடன். இவரது மனைவி கவுசல்யா (வயது 21). இத்தம்பதிக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிய நிலையில் 3 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.
இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கவுசல்யா மனமுடைந்து காணப்பட்டார். இன்று அதிகாலை கவுசல்யா தனது வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதை கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி கவுசல்யாவின் பெற்றோருக்கும், எடப்பாடி போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.
கவுசல்யாவின் பெற்றோர் தங்களது மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக எடப்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கவுசல்யா கணவர் மற்றும் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.