

காடையாம்பட்டி:
சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அடுத்த டேனிஷ்பேட்டை அடிவாரம் பகுதியை சேர்ந்தவர் செல்வம். விவசாயி. இவரது மகன் கார்த்திகேயன் (வயது 28). இவருக்கு திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தை உள்ளது.
கார்த்திகேயன் சொந்தமாக லாரி வைத்து தொழில் செய்து வருகிறார். இவர் சந்தப்பேட்டை பகுதியை சேர்ந்த செங்கல் புரோக்கர் ரமேஷ் என்பவர் மூலம் திருச்சிக்கு செங்கல் லோடு லாரியில் கொண்டு சென்றார். அங்கு செங்கல் வாங்கும் புரோக்கர் செங்கலை பார்த்து விட்டு 3 ஆயிரம் செங்கல்களில் சுண்ணாம்பு கல்லாக உள்ளதாக கூறி, அதற்கு பணம் தர முடியாது என்று கார்த்திகேயனிடம் தெரிவித்தார்.
இதற்கிடையே கார்த்திகேயன், தனது பணம் 30 ஆயிரத்தை ரமேஷிடம் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது. சில வாரங்களுக்கு பிறகு கார்த்திகேயன் திருச்சியிலிருந்து காடையாம்பட்டிக்கு கொண்டு வந்த ஒரு லோடு மணலை ரமேஷ் தனது மாமனாருக்கு இறக்கி கொண்டதாக தெரிகிறது. கார்த்திகேயன் மணலுக்கு பணம் கேட்டபோது நீ தரவேண்டிய 39 ஆயிரம் பணத்தை இதில் கழித்துக் கொள்ளலாம் என்று கூறினார்.
இந்த பிரச்சினை முடிந்த நிலையில் நேற்று காலை கார்த்திகேயன் லாரியை தீவட்டிப்பட்டி பகுதியை அடுத்த சோத்துபாதை என்ற இடத்தில் உள்ள பட்டறையில் விட்டிருந்தார். இதை கண்ட ரமேஷ் லாரியை எடுத்து சந்தப்பேட்டை அருகில் வசிக்கும் உறவினர் வீட்டில் மறைத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த கார்த்திகேயன் லாரியை எதற்கு எடுத்து வந்தாய் என்று ரமேஷிடம் கேட்டார். அப்போது கோபமடைந்த ரமேஷ், மர கட்டையை எடுத்து கார்த்திகேயன் மண்டையில் தாக்கியதாக கூறப்படுகிறது.
தலையில் பலத்த காயம் அடைந்த அவரை நண்பர்கள் மீட்டு தீவட்டிப்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ஓமலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து தீவட்டிப்பட்டி போலீசார், செங்கல் லோடு புரோக்கரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.