

ஏற்காடு:
ஆண்டு தோறும் ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் ஏற்காடு வருவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக சுற்றுலா பயணிகள் ஏற்காடு வரவில்லை.
தற்போது கொரோன ஊரடங்கு நீக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணிகள் வருகைக்காக ஏற்காடு பூங்காக்களில் பல வண்ண மலர்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. ஏற்காடு படகு இல்லத்தில் படகுகளுக்கு வர்ணம் பூசி புதுப்பிக்கப்பட்டு உள்ளது.
ஏற்காட்டில் உள்ள லேடி சீட், ஜென்ஸ் சீட், ரோஜா தோட்டம், அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, படகு இல்லம் சேர்வராயன் குகைக்கோவில், பக்கோடா பாயிண்ட் போன்ற முக்கிய சுற்றுலா இடங்களில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பராமரிப்பு பணிகளும் நடந்து வருகிறது. இன்று ஞாயிறு விடுமுறை நாளில் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
மேலும் வரும் நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் ஏற்காடு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் ஏற்காட்டில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வந்து சீதோசன நிலை .குழுமையாக காணப்படுகிறது.
இந்த சீதோஷ்ண நிலையை ரசிப்பதற்காகவே சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் ஏற்காட்டில் குவிந்துள்ளனர்.