சேலத்தில் போலீசாருக்கு டிமிக்கி காட்டிய தக்காளி திருடன்

சேலத்தில் போலீசாருக்கு டிமிக்கி காட்டிய தக்காளி திருடனை போலீசார் ஜெயிலில் அடைத்தனர்.
,
,
Published on

சேலம்:

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள பெருமாகவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 26). இவர் பெருமாகவுண்டம்பட்டி, சஞ்சீவிராய பெருமாள் கோவில் அருகே காய்கறி கடை வைத்துள்ளார். இவருக்கு தக்காளி பார்சல் இறக்குபவர்கள் 26-ந்தேதி அதிகாலையில் 60 கிலோ எடையுள்ள 2 கிரேடு தக்காளி பெட்டி இறக்கி வைத்துள்ளனர். 

இந்நிலையில் கடை உரிமையாளர் சங்கர், வழக்கம்போல் காலையில் கடையை திறக்க வந்த போது ஒரு கிரேடு தக்காளி பெட்டி மட்டுமே வெளியே இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். 

இதையடுத்து சிசிடிவி கேமராவை பார்த்த போது ஒருவர் மொபட்டில்  தக்காளி பெட்டியை திருடிச் சென்றது தெரிய வந்தது. அந்த நபர் , மொபட்டில் வந்து கடை முன்பு நின்று சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, தக்காளியை கிரேடுடன் எடுத்து, கொண்டு செல்வது பதிவாகியிருந்தது. அந்த சி.சி.டி.வி வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. 

 இதுகுறித்து மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் சங்கர், புகார் கொடுத்தார். புகாரின் பேரில் எஸ். ஐ. ராஜேந்திரன் வழக்குப் பதிவு செய்து தக்காளி திருடனை தேடிவந்தனர். அந்த மர்ம நபர்   போலீசாரிடம் சிக்காமல் டிமிக்கி காட்டி வந்தார்.இதனிடையே இளம்பிள்ளை, பெருமாகவுண்டம்பட்டி, புதுரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த ஒரு வாரமாக தக்காளி அதிக அளவில் திருட்டு போனதும், இதனால் சிறு வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்திருப்பதும் தெரியவந்தது.

சி.சி.டி.வி. காட்சியில் பதிவாகி இருந்த வண்டி நம்பரை வைத்து விசாரணை செய்ததில், அவர் வெண்ணந்தூர் தங்கசாலை வீதி பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் சின்ராஜ் (வயது32) என்பது தெரியவந்தது. இவர் ஏற்கனவே செவ்வாய்ப்ேபட்டை பகுதியில் ஆப்பிள் பெட்டி திருடிய வழக்கில் கைதாகி ஜாமீனில்  வெளியே வந்த நிலையில், மகுடஞ்சாவடி காவல் நிலைய எல்லைப் பகுதியில் தக்காளி திருட்டில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது. 

இதனை அடுத்து தக்காளி திருடிய சின்ராஜை போலீசார் கைது செய்து சங்ககிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com