குடும்ப சண்டையை தடுக்க போன 5 பேர் மீது வன்கொடுமை சட்டம் பாய்ந்தது
தாரமங்கலம்:
தாரமங்கலம் அருகிலுள்ள கருக்கல்வாடி கிராமம், கந்தன்காட்டு வளவு பகுதியை சேர்ந்த குமரேசன்- ஜோதிகா தம்பதியினர். இவர்களுக்குள் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு மனைவி ஜோதிகாவை அடித்து உதைத்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் கணவன் - மனைவிக்குள் தகராறு ஏற்பட்டு ஜோதிகாவை அடித்து உதைத்துள்ளார். வலிதாங்க முடியாமல் ஜோதிகா வீட்டிலிருந்து வெளியே ஓடிவந்துள்ளார். அப்போது அக்கம்பக்கத்தினர் ஏண்டா மனைவியை இப்படி போட்டு அடிக்கிறாய் என்று கூறி சண்டையை விலக்கி விட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த குமரேசன் தடுக்க வந்தவர்களை தாக்கியுள்ளார். இதனால் இரு தரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு காயம் அடைந்த கணவன் -மனைவி இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மேலும் அப்பகுதியை சேர்ந்த ஆனைக்கவுண்டர் (வயது 43) தனபால் (40) பழனியப்பன் (37) பாவாயி (70) பழனிச்சாமி (37) ஆகியோர் மீது ஜாதிப்பெயரை சொல்லி திட்டியதாக கூறி ஜோதிகா தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் 5 பேர்மீதும் வன்கொடுமை சட்டத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

